26.7 C
Chennai
May 17, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

சோழன் To பல்லவன்- சா.சி.சிவசங்கர் அமைச்சரான கதை!


த.எழிலரசன்

தமிழகத்தின் மிக முக்கிய துறைகளில் ஒன்று போக்குவரத்துத் துறை. மக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமான பேருந்துகளுக்கான துறை அமைச்சராகியுள்ளார் எஸ்.எஸ்.சிவசங்கர். மூத்த அமைச்சரான ராஜகண்ணப்பனிடம் இருந்த துறை சிவசங்கர் வசம் வந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள தேவனூரில் 1969ஆம் ஆண்டு பிறந்தவர் சிவசங்கர். இவரது தந்தை சிவசுப்பிரமணியன் தீவிர திராவிட இயக்கப் பற்றாளர், அரியலூர் மாவட்டத்தில் திமுகவை வளர்த்தெடுத்தவர்களில் ஒருவர். தனது 10 வயதிலேயே திருச்சியில் நடந்த இந்தி எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டார் சிவசங்கர். அப்போதே தொடங்கிவிட்டது இவரின் அரசியல் பயணம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எஞ்சினீயரிங், எம்பிஏ முடித்தார். கல்லூரி படிக்கும்போதே புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்த சிவசங்கர், புகைப்படவியலாளர் சங்க செயலாளராக இருந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அரசியல் பயணம்

1991 – 93 என 2 வருடங்கள் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணி. ஆடிய கால்கள் சும்மா இருக்காது என்பதைப் போல, 1993ல் முழு நேர அரசியலில் நுழைந்தார். பம்பரமாக சுழன்று கட்சி பணியாற்றினார். அதன் பலன் 1996ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1999ஆம் ஆண்டு ஆண்டிமடம் ஒன்றிய திமுக செயலாளராக தேர்வானார்.

2001ல் அரியலூர் தனி மாவட்டமாக பிரிக்கப்படவே அரியலூர் மாவட்டத்தின் செயலாளராக இளம் வயதிலேயே நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் இணைக்கப்பட்டதால், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளராக தொடர்ந்தார். ஆனாலும் துவண்டுவிடவில்லை, கட்சியில் கடுமையாக உழைத்தார். 2001ம் ஆண்டில் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரானார். உள்ளாட்சி பிரதிநிதியாக தன் பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்தார்.

2006 சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த தொகுதியான ஆண்டிமடத்தில் போட்டியிட்டு வென்று முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அதன் தொடர்ச்சியாக 2011ஆம் ஆண்டு திமுக சார்பில் வெற்றிபெற்று சட்டமன்றம் சென்ற 23 எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவர். சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 2014ஆம் ஆண்டு ஆளுநர் உரையை கிழித்து அவையில் தூக்கியெறிய, அவையிலிருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

இதன் காரணமாக 2016 தேர்தலில் சிவசங்கரின் வெற்றியை எப்படியேனும் தடுத்தாக வேண்டும் என்று நால்வரணியில் இருந்த வைத்திலிங்கத்தை அரியலூருக்கு அனுப்பினார் ஜெயலலிதா. தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் சிவசங்கர். ஆனாலும் தோல்வியும் நல்லது என தனது தோல்வியையே கலாய்ந்து முகநூலில் பதிவெழுதினார். சிவசங்கரை தோற்கடித்த காரணத்திற்காகவே தாமரை ராஜேந்திரனுக்கு கொறடா பதவி வழங்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா.

2016 – 21 சிவசங்கருக்கு சோதனை காலகட்டமாகவே இருந்தது. பாமகவின் கை ஒங்கியிருந்த அரியலூரில் இந்த காலகட்டத்தில் திமுகவின் செல்வாக்கத்தை தூக்கி நிறுத்த கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மாவட்டம் முழுவதும் சுற்றிச் சுழன்று களப் பணியாற்றி இளைஞர்களை ஒருங்கிணைத்தார்.

2019 மக்களவை தேர்தல் சமயம், அரியலூரிலுள்ள ஒரு கிராமத்தில் விசிகவுக்கு வாக்கு கேட்டு யாரும் வர வேண்டாம் என திமுக பரப்புரை வாகனங்கள் மறிக்கப்பட்டன. உடனடியாக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வாகனத்தில் இருந்து இறங்கினார் சிவசங்கர், எதிர்தரப்பினர் வழிவிட்டு அமைதியாக சென்றனர். திருமாவளவனை வெற்றிபெறவைக்க கடுமையாக பணியாற்றி அதில் வெற்றியும் பெற்றார். 2021 தேர்தலில் அவருக்கு குன்னம் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியடைந்து பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சரானர்.

திமுக ஆட்சில் நடந்த முதல் அமைச்சரவை மாற்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் இருந்து போக்குவரத்துத் துறைக்கு அமைச்சராகியுள்ளார். இதன்மூலம் முதலமைச்சரின் நம்பிக்கை உரியவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார் சிவசங்கர்.

எளிதில் அணுகும் அமைச்சர்

அமைச்சர் சிவசங்கரை யார் வேண்டுமானாலும், எப்போதும் அணுக முடியும். எத்தனை பேர் இருந்தாலும் அனைவரின் சொல்லுக்கும் காதுகொடுத்து கேட்டு பதிலளிப்பார். ஏதேனும் அவசர வேலை காரணமாக பேச முடியாவிட்டாலும் தனது எண்ணை கொடுத்து அழைக்கச் சொல்லிவிட்டு செல்வார். 2016க்கு முன்பு வரை சட்டமன்றத்திற்கு வர அரியலூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரயிலில் வந்து இறங்குவார். அங்கிருந்து சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஆட்டோவில் செல்வார். மீண்டும் ரயில் பயணம். ஒருவேளை ரயில் கிடைக்கவில்லை என்றால் நேராக கோயம்பேடு சென்று பேருந்து பிடித்து சென்றுவிடுவார்.

அதுபோல அவர் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொண்டதே இல்லை. பெரம்பலூர் மாவட்டம் கொளப்பாடி கிராமத்திற்கு நூலகம் வேண்டுமென செம்பருத்தி என்ற மாணவி மனு கொடுத்தார். நூலம் கட்டி முடித்த பிறகு தான் திறக்காமல் செம்பருத்தி கையாலேயே திறக்கவைத்தார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது நெல்லை சென்ற அமைச்சர், மாணவர்கள் விடுதியில் உணவு தரத்தை பரிசோதித்தார். எப்படி தெரியுமா? அவருக்கான உணவு விருந்தினர் மாளிகையில் தயாராக இருந்தபோதும், மாணவர்களுடனே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு அடுத்த நிகழ்வுக்கு சென்றுவிட்டார்.

எழுத்தாளர் சிவசங்கர்

சிவசங்கரின் சமூக நீதி, திராவிட இயக்கம் குறித்த பார்வையும் மிகவும் தனித்துவமானது. அடுக்கு மொழி பேச்சு கிடையாது, அலங்கார பேச்சு கிடையாது. வரலாற்றுப் பூர்வமாக,  தரவுகளோடு தனது தர்கத்தை முன்வைப்பார். தெளிந்த நீரோடைப் போல வந்து விழும் சொற்கள் சமூக நீதி பேசும். விவாத நிகழ்ச்சி ஒன்றில் இளம்பெண் ஒருவருக்கு இடஒதுக்கீடு என்றால் என்ன, சமூகநீதி என்பது யாது என அவர் விளக்கிய காட்சியே அதற்கு சாட்சி.

பேச்சு மட்டுமல்ல இவரின் எழுத்தும் சமூகநீதி பேசும். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சிவசங்கரின் எழுத்துக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தோழர் சோழன், சோழன் ராஜா ப்ராப்தி, மக்களோடு நான் உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
சமூகநீதி, திராவிட இயக்கம் குறித்து இளம் தலைமுறையினரும், மாணவர்களும் தெரிந்துகொள்ள மாதந்தோறும் திராவிட பயிலரங்கம் வகுப்புகளை எடுத்துவந்தார். கடந்த 29ஆம் தேதி அவர் திராவிடம் குறித்து இளைஞர்களுக்கு வகுப்பெடுத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், அவர் போக்குவரத்துத்துறை அமைச்சரான செய்தி வந்தது.

நீட் எதிர்ப்பு முதல் அனிதா வரை

நீட் தேர்வுக்கு எதிராக அவர் எழுப்பிய குரல் முக்கியமானது. 2017ல் திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட அனிதாவைப் பற்றி எஸ்.எஸ்.சிவசங்கர் எழுதிய பதிவு கவனம் ஈர்த்தது. நீட்டுக்கு எதிராக அனிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் அளவுக்கு உறுதுணையாக இருந்தவர். எப்போது அனிதா குறித்து பேசுகிறாரோ அப்போதெல்லாம் அவரது கண்கள் கலங்கிவிடும்.

தந்தைக்கு நழுவிய வாய்ப்பு

மிகவும் பின்தங்கிய அரியலூர் மாவட்டத்தில் இருந்து அமைச்சர் போன்ற முக்கிய பொறுப்புகளில் யாரும் இருந்ததில்லை. 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவசங்கரின் தந்தை சிவசுப்பிரமணியன் ஆண்டிமடம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் அவருக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், பாமகவின் பேராசிரியர் தீரனிடம் தோல்வியடைந்தார். இதன் காரணமாக அவரால் அமைச்சராக முடியவில்லை. அப்பாவுக்கு கிடைக்காத அந்த வாய்ப்பு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மகன் சிவசங்கருக்கு கிடைத்தது.

தற்போது, முக்கிய துறையே கிடைத்துள்ளதால், அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சோழ மண்ணிலிருந்து சென்ற சிவசங்கர், போக்குவரத்து துறையான பல்லவனுக்கு அமைச்சராகியுள்ளார். அமைச்சர் என்ற பதவியை பயன்படுத்தி அரியலூர் மாவட்டத்தை வளர்ச்சியடைந்த மாவட்டமாக கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

– த.எழிலரசன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading