30.8 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

2023ல் இந்திய அரசியலில் இத்தனை முக்கிய நிகழ்வுகளா..?

2023ம் ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்திய அரசியலில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை குறித்து விரிவாக பார்க்கலாம்.

2023 ஆண்டு இன்னும் ஒரிரு தினங்களில் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர்.  அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில் 2023ம் ஆண்டு இந்திய அரசியலில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அவை குறித்து விரிவாக காணலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பாராளுமன்றத்தில் எதிரொலித்த ஹிண்டன்பர்க் அறிக்கை : 

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியது. செயற்கையாக பங்குகளின் மதிப்பை அதிகரிப்பது, தவறான அறிக்கையை தருதல் என அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு எதிராக விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

பிரிஜ் பூஷணுக்கு எதிராக இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம் : 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாக்‌ஷி மாலிக் தனது விருதுகளை கங்கை நதிக்கரையில் வீசப்போவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரிஜ்பூஷணின் உதவியாளர் சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிராக சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாக்‌ஷி மாலிக் அனைத்திலிருந்து தான் விலகுகிறேன் என அறிவித்தார். இதன் பின்னர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு கலைத்து மத்திய விளையாட்டுத்துறை உத்தரவிட்டது.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது 

டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்var மணீஷ் சிசோடியாவை பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. அதன்பின் மார்ச் 1ம் தேதி சிசோடியா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

கர்நாடகத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த காங்கிரஸ்

கர்நாடக மாநிலத்தில்  நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மே மாதம் 20ம் தேதி பதவியேற்றது. துணை முதல்வராக கர்நாடக மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ராகுல் காந்தியின் தகுதி நீக்கமும் , உச்சநீதிமன்றத்தின் தண்டனை நிறுத்தமும்

பிரதமர் மோடி சமூகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது எம்பி பதவி தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. இதனால், நான்கு மாதங்களுக்கு பின்னர் நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி சென்றார்.

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு கடந்த மே 28ம் தேதி திறக்கப்பட்டது.

இந்தியா – பாரத் சர்ச்சை

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல பிரதமர் மோடியின் இந்தோனேஷிய பயணம் குறித்து வெளியான நிகழ்ச்சி நிரலில் ”Prime Minister of Bharath” என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையானது.

எதிர்கட்சிகள் இணைந்து “இந்தியா” கூட்டணி உருவானது:

பாஜக வின் பத்து ஆண்டுகால ஆட்சியின் மீதான அதிருப்தி, பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகளை பாரபட்சமாக நடத்துவது,  விசாரணை ஏஜென்சிகள், அமலாக்கத்துறை மற்றும்  மத்திய அரசின் நிறுவனங்களை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவது போன்ற முக்கிய பிரச்னைகளை முன்வைத்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் முதல் எதிர்கட்சிக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் முக்கிய எதிர்கட்சிகளான திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய  ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் , இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

இதன் பிறகு பெங்களூரில் இரண்டாவது எதிர்கட்சிக் கூட்டம் கடந்த ஜூலை 18 மற்றும் 19ம் தேதி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தியா முழுக்க எதிர்பார்க்கப்பட்ட இந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் புதிய கூட்டணி உருவானது. இந்த கூட்டணிக்கு Indian National Developmental Inclusive Alliance என்று பெயரிடப்பட்டது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

 

மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது. மக்களவையில் இருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்த நிலையில், மாநிலங்களவையில் எதிர்ப்பு ஏதும் இன்றி ஏகமனதாக நிறைவேறியது. இதனைத்தொடர்ந்த அந்த மசோதா குடியரசு தலைவர் திரௌபதி முர்மவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவிற்கு குடியரசுதலைவர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அது சட்டமாக மாறியுள்ளது.

பற்றி எரிந்த மணிப்பூர் விவகாரம் – நாடாளுமன்றத்தில் எதிரொலி

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வராததால் மூன்று மாதங்களுக்கு மேலாக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.

இதனிடையே குகி பழங்கியினத்தை சார்ந்த இரண்டு பெண்கள்  நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எதிர்கட்சிகள் அவையை முடக்கின.

நாடே எதிர்பார்த்த ஐந்து மாநில தேர்தல் :

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மற்றும் மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், தெலங்கானாவில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியமைத்து புதிய முதலமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். தெலங்கானாவில் ரேவந்த ரெட்டி முதலமைச்சரானார்.

மஹூவா மொய்த்ரா எம்பி பதவி பறிப்பு

துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிராநந்தனியுடன் தனது நாடாளுமன்ற இணையதள உள்நுழைவைப் பகிர்ந்து கொண்டதாகவும்,  அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியதாகவும் மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து புகாரளித்த நிஷிகாந்த் துபே மற்றும் புகாருக்கு உள்ளான மஹுவா மொய்த்ரா ஆகியோரை நேரில் அழைத்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்தது.

புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் :

நாடாளுமன்ற மக்களவையில்  பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர்,  அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இது நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வரலாற்றுச் சாதனை படைத்த எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம் :

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் குறித்து உளதுறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து எம்பிக்கள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சேர்த்து 146 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றிலேயே ஒரே கூட்டத்தொடரில் இத்தனை பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. இவர்களில் அதிகம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ச.அகமது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading