சொந்தமாக வீடு,கார் இல்லை..பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பிரதமர் மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி மட்டுமே என்பது பிரமாணப் பத்திர தாக்கல் மூலம் தெரிய வந்துள்ளது.  இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நான்கு…

பிரதமர் மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி மட்டுமே என்பது பிரமாணப் பத்திர தாக்கல் மூலம் தெரிய வந்துள்ளது. 

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்தன. இந்த நான்கு கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 379 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதனையடுத்து ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடுவோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

அந்தவகையில் பிரதமர் மோடி இன்று உத்தரப் பிரதேசம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை வாரணாசி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான எஸ். ராஜலிங்கத்திடம் தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப்பத்திரத்தையும் மோடி தாக்கல் செய்துள்ளார். அதன் மூலம் அவரின் சொத்துமதிப்பு வெளியாகி உள்ளது. பிரதமராக இருக்கும் மோடியிடம் சொந்தமான வீடு மற்றும் கார் இல்லை என்பது மக்கள் அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது குற்ற வழக்குகளும் ஏதும் இல்லை. அவரது வருமானமாக அவரது சம்பளம் மட்டுமே இல்லை.

வங்கியில் இருப்பு தொகையாக ரூ.2.85 கோடி டெபாசிட் செய்துள்ளார். இவரிடம் 4 தங்க மோதிரங்களும் உள்ளன. அந்த மோதிரங்களின் மதிப்பு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் ஆகும். மோடியிடம் ரொக்கமாக ரூ.52 ஆயிரம் 920 உள்ளது.  கடந்த 2014 ஆம் ஆண்டு இவரின் சொத்து மதிப்பு 1.64 கோடியாக இருந்தது. அடுத்த 5 ஆண்டுகளில் 2019-ல் ரூ.2.51 கோடியாக இருந்தது. தற்போது ரூ.3.02 கோடியாக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் மோடியின் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் மட்டுமே உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த 1978 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்துள்ளதாகவும், 1983 ஆம் ஆண்டில் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பிரதமர் மோடியிடம் மொத்தம் ரூ. 3.02 கோடி மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.