பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தேர்தல் அதிகாரியும், வாரணாசி மாவட்டத்தின் ஆட்சியருமான ராஜலிங்கத்திடம் வேட்புமனு தாக்கல் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்தன. இந்த நான்கு கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 379 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதனையடுத்து ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடுவோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
அந்தவகையில் பிரதமர் மோடி இன்று உத்தரப் பிரதேசம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை வாரணாசி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான எஸ். ராஜலிங்கத்திடம் தாக்கல் செய்தார். பிரதமர் மோடியிடம் வேட்புமனு பெற்ற வாரணாசி ஆட்சியர் எஸ். ராஜலிங்கம் என்பவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர்.
கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இதனையடுத்து திறமையாக செயலாற்றிய இவர், பிரதமர் மோடியின் வழக்கமான தொகுதியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோயில் நகரமுமான வாரணாசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக கடந்த 2022-ம் ஆண்டு பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியிடம் இவர் வேட்புமனு பெற்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தென்காசி மாவட்ட மக்களிடையே இது பெரும் பேசு பொருளாகியுள்ளது.
https://twitter.com/subba2123/status/1790298010330828846
திருச்சி என்ஐடி-யில் பொறியியல் பட்டம் பெற்ற இவரின் தந்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளாராக பணியாற்றியவர். தாய் கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலராக இருந்தவர்.







