முக்கியச் செய்திகள்தமிழகம்

“ஊரக பகுதிகளிலும் காலை உணவு திட்டம்” – 14 மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

“காலை உணவு திட்டத்தை ஊரக பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்” என 14 மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை,  புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.  சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல் நாளான இன்று சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம்,  திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜூன் 20-ம் தேதி சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்க உள்ள திட்டங்கள் குறித்தும் தற்போது நடைமுறையில் இருக்கும் திட்டங்களின் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.  குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் , மாவட்ட வாரியாக நடைபெற்ற பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை:

”கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மாநாட்டிற்குப் பிறகு இன்று மீண்டும் சந்திக்கிறோம்.  தேர்தல் பணிகளை மிகச்சிறப்பாகக் கையாண்ட உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!  மிகக் கடுமையான இந்தக் கோடை காலத்தில்,  குடிநீர் பிரச்சினை மற்றும் மின்வெட்டு ஆகியவை ஏற்படாமல் கவனமாக கையாண்ட உங்களுக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாம் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்ந்து,  திட்டங்களின் பயன்கள் தேவையானவர்களுக்குச் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது.  இதனை மக்களுடன் உரையாடிய எனது நேரடி அனுபவங்களில் இருந்தே சொல்கிறேன்.

நமது அரசு கொண்டு வரும் திட்டங்களைக் கடைக்கோடி மனிதரிடமும் கொண்டு போய்ச் சேர்த்ததில் பெரும் பங்கு அரசு அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் இருக்கிறது.  இதனை கண்காணித்த மாவட்ட ஆட்சியர்களான உங்களுக்கு என்னுடைய நன்றி!  அடுத்து வரப்போகும் நாட்களிலும் இன்னும்பல திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புதுமைப்பெண் திட்டம் போல,

மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’  திட்டம் தொடங்கப்பட உள்ளது.  இதுபோன்ற திட்டம் தான் தமிழ்நாட்டின் இளைய சக்தி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் திட்டங்கள்! இதுபோன்ற திட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும்,  மேம்பாட்டிற்கும் மிக முக்கியமான ஆண்டுகள்! புதிய உத்வேகத்துடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

ஒரு சிறந்த நல்லாட்சியை வழங்க சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு,   சிறந்த சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துதல்,  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி,  வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் , பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி எளிதாக அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய நான்கு குறிக்கோள்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்! இவைதான் நல்லாட்சியின் இலக்கணங்கள்! அத்தகைய நல்லாட்சியைதான் நாம் வழங்கி வருகிறோம்!

ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.  புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.  இது நமது அரசு என்று மக்களை நினைக்க வைத்துள்ளோம்.  இவை அனைத்தும் தொய்வில்லாமல் வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும்.  அதற்கு அடிப்படையாக நீங்கள் முழுக்கவனம் செலுத்த வேண்டியவற்றை எடுத்து சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு.

“மக்களுடன் முதலமைச்சர்” திட்டத்தினை வரும் ஜூலை திங்கள் 15-ஆம் நாள் முதல் செப்டம்பர் திங்கள் 15-ஆம் நாள் வரை ஊரகப் பகுதிகளில் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” மற்றும் “நீங்கள் நலமா?” போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளது.  வருவாய்த் துறையில், பட்டா மாறுதல், சான்றிதழ்களைப் பெறுவதில் பொதுமக்கள் அடையும் சிரமங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

* “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்திற்கும்; இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் நீங்கள் தனிக்கவனம் செலுத்தி பணிகளை துரிதமாக முடிக்க வேண்டுமென்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.  அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வகையில் “கல்லூரிக் கனவு” “உயர்வுக்குப் படி” போன்ற திட்டங்களை நீங்கள் ஆர்வத்துடனும், முனைப்புடனும் செயல்படுத்த வேண்டும்.

அதேபோல்,  விரைவில் தொடங்கப்படவிருக்கும் “தமிழ்ப்புதல்வன்” திட்டமும் மிகவும் முக்கியமான திட்டமாகும்.  இதுபற்றி முதலிலேயே சொல்லி இருக்கிறேன்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தையும் நீங்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும்.

2024-25-ஆம் ஆண்டில் தங்கள் மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை விரைவில் காலம் தாழ்த்தாமல் முடிக்க வேண்டுமென்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் இயற்கை இடர்ப்பாடுகளின் காரணமாக பணிகள் தாமதப்படக்கூடும். இதனை கருத்தில் கொண்டு கிடைத்துள்ள குறுகிய காலத்திற்குள் சரியாக திட்டமிட்டு மாவட்டங்களில் திட்டப் பணிகளை நல்ல தரத்துடன் விரைவாக முடிக்க வேண்டுமென்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இன்னொரு மிக முக்கியமான ஒரு கடமையும் உங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் நாம் கட்டுப்படுத்தி இருக்கிறோம். ஆனால் அது போதாது! போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் ஒழுங்குப் பிரச்னை மட்டுமல்ல. சமூக ஒழுங்குப் பிரச்னை! எனவே தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்காக பெரும் இயக்கத்தை நாம் தொடங்க இருக்கிறோம்.

மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள். மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் நகராட்சித் துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, போதைப் பொருட்கள் பயன்பாட்டை உங்கள் மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் தீவிரக் கவனம் செலுத்தியாக வேண்டும். “போதை பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை, முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்” என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். இன்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களைப் பற்றி, தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுரை வழங்கவுள்ளார்கள்.

தலைமைச் செயலாளர் வழங்கும் அறிவுரைகளின் அடிப்படையில், உங்கள் பணிகளைச் சிறப்பாக ஆற்றவும், மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்மென்றும் உங்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கணவரின் சடலத்துடன் 2 நாட்களாக தங்கியிருந்த மனைவி

Halley Karthik

திருச்சி, சேலம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம்

சென்னையில் டிச.9 -ஆம் தேதி ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார்பந்தய போட்டி! முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading