ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள். ஏன் இந்த நிலை? எங்கே போனது கொள்கை, கோட்பாடு? பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டதா தொகுதிப் பிரச்னை? என ஆராய்கிறது இந்த செய்தி…
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை அனல் பறக்கிறது. திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாதக என அங்கு நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு இடையே நேரடி மோதல் உருவாகியுள்ளது. திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களும், நிர்வாகிகளும், அதிமுகவைச் முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் தொகுதியை முற்றுகையிட்டு வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மக்களை நாடிச் சென்று செய்து வரும் விதவிதமான பரப்புரைதான் இப்போது பேசு பொருள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டிரம்ஸ் வாசித்தபடி பரப்புரை
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பெரியார் வீதி, மண்டபம் வீதி பகுதியில் டிரம்ஸ் வாசித்தபடி பரப்புரை மேற்கொண்டார். மேலும் சில இடங்களில் பரோட்டோ போட்டும் வாக்கு வேட்டையாடினார். இதேபோல் வேறொரு இடத்தில் பரோட்டோ போட்டு பரப்புரை செய்தார்.
காய்கறி விற்று வாக்கு வேட்டை
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனி உள்ளிட்ட பகுதியில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதிஷ் கட்சியினருடன் சென்று அங்குள்ள காய்கறி கடையில் விற்பனை செய்து பிரச்சாரம் செய்தார்.
முறுக்கு விற்று பரப்புரை
ஈரோடு கிழக்கில் முனிசிபல் காலனியில் பரப்புரை செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பலகார கடையில் ஜிலேபி போட்டு கொடுத்தும், முறுக்கு விற்பனையில் ஈடுபட்டும் வாக்கு வேட்டையில் ஈடுபட்டார். ஈரோடு அக்ரஹாரம், கக்கன் நகர் பகுதியில் சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் VG.பாஸ்கரன் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் துண்டுக்கு தான்முடிந்து கொடுத்து வாக்கு சேகரித்தார்கள்.
இதையும் படிக்கலாம் – சீனாவை வீழ்த்த இந்தியாவிற்கு கைகொடுக்குமா வெள்ளை தங்கம்?
ஓடி ஓடி வாக்கு வேட்டை
இதேபோன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அசோகபுரம் பகுதியில் வாக்கு வேட்டையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி, வீதி வீதியாக ஓடி ஓடிச் சென்றும், இரு சக்கர வாகனத்தில் சென்றும் வாக்கு சேகரித்தார். வயதானவர்கள், இளைஞர்களோடு, புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதேபோன்று பல்வேறு கட்சியினரும் விதவிதமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளம்பர அரசியலா?
இத்தகைய நூதன பரப்புரை பற்றி அரசியல் நோக்கர்களிம் பேசிய போது, பரோட்டா போடுவது, டீ போடுவது அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களின் வேலையா என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலாக 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டை ஆளும் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களும், ஆண்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் நாங்கள் ஈரோடு தொகுதிக்கு செய்தது என்ன என்பதைக் கூறியும் எதிர்தரப்பினர் இதைச் செய்யவில்லை என்று கூறியும் ஓட்டு கேட்கலாம். அல்லது தொகுதிப் பிரச்னையை ஆராய்ந்து அதையெல்லாம் எங்கள் கட்சிக்காரர் வெற்றி பெற்றால் செய்து தருவோம் என்றும் கூட கேட்கலாம். ஆனால் அதை விடுத்து, பிரச்சாரத்தின் போக்கும் மக்களை அணுகும் முறையும் புதுவிதமாகவும் வேடிக்கையாகவும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
திண்ணைப் பரப்புரை
அண்மைக் காலமாக திண்ணைப் பரப்புரையிலும் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்துகின்றன. வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவர்களுடைய பிரச்னைகளைக் கேட்டறிந்து தீர்வுகளைச் சொல்லி பரப்புரை செய்வது. அல்லது ஒரு தெருவில் முக்கிய இடத்தில் நிர்வாகிகள் அமர்ந்து, அந்த தெரு வாக்காளர்களை அழைத்து அவர்களுடைய குறைகளைக் கேட்டறிதல். அதில் பிரச்னைகள் செவி மடுக்கப்பட்டு, தீர்வுகள் சொல்லப்படும், அல்லது பிரச்னைகளைத் தீர்க்க வாக்குறுதிகள் அளிக்கப்படும். பரோட்டோ போட்டு, இட்லி சுட்டு, டீ போட்டு நடக்கும் பரப்புரைகளில் மக்களிடம் குறைகள் கேட்கப்படுவதை விடுத்து, விளம்பர அரசியல் தலைதூக்குவதையே கண்கூடாகக் காண முடிவதாகவும், பிரச்சாரம் என்ற பெயரில் காமெடி நடப்பதாகவும் ஊடகங்களும் இத்தகைய பரப்புரைகளை பெரிதாக்குவதாகவும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.
இந்த நூதன பரப்புரை தொடர்பாக நியூஸ் 7 தமிழ் டிவிட்டர் பக்கத்தில் நேற்று கருத்துக்கணிப்பு நடத்தி மக்கள் கருத்தறிந்தோம்.
அதில் இதுபோன்ற பரப்புரை ஏற்புடையது என்று 12.6 விழுக்காட்டினரும், தேவையற்றது ஏனுறு 87.4 விழுக்காட்டினரும் வாக்களித்துள்ளனர். அத்துடன் தங்களின் உணர்வுபூர்வமான கருத்துகளையும் அதில் பதிவிட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கில் களைகட்டி இருக்கும் பரோட்டோ சுடுதல், டீ போடுதல், இட்லி அவித்தல் என 2ம் கட்டத் தலைவர்களின் நூதன பரப்புரைகள் பற்றி உங்கள் கருத்து?#Erode | #ErodeEastByPoll | #erodebyeelection | #campaigns | #DMK | #AIADMK | #Congress | #BJP | #dmdk | #NTK | #News7TamilUpdates
— News7 Tamil (@news7tamil) February 15, 2023
மக்கள் பிரச்னைக்கு தீர்வு தேவை
ஈரோடு கிழக்கு தொகுதியின் பிரதான பிரச்னை சாயக் கழிவு தான். அதைத் தீர்ப்பது பற்றியும், தொகுதி மக்களின் இதர முக்கிய பிரச்னைகளைக் கண்டறிந்து அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் வேட்பாளர்கள் விவாதம் நடத்தினால் நன்றாக இருக்கும்.
மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று என்ற அறிவுரையை அறிஞர் அண்ணா வழங்கினார்.
அவரது வழியில் வந்த திமுக, அதிமுகவினர் மக்களின் பிரச்னையை ஆராய்ந்து அறிந்து தீர்வு காண முயற்சிக்க வேண்டும். மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை, வாக்குறுதிகளை பிரதானப்படுத்தி வாக்கு சேகரிக்க வேண்டும். அதைவிடுத்து, கவனத்தை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளும் வித்தியாசமான தவிர்த்து, மக்கள் பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..
-ஜெயகார்த்தி