தினம் தினம் திருப்பங்களை சந்தித்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிப்பெற, கட்சிகள் வகுத்து வரும் வியூகங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரோடு கிழக்கில் 6 முனைப் போட்டி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேர மாற்றங்களினால், 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது. இரட்டை இலை சின்னத்திற்காக ஓபிஎஸ் அணி வேட்பாளரும், குக்கர் சின்னம் கிடைக்காததால் அமமுக வேட்பாளரும் விலகியுள்ளனர். இதையடுத்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் மேனகா, தேமுதிக ஆனந்த் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். சுயேச்சைகளும் போட்டியிட்டாலும் இந்த 4 கட்சிகளுக்கும் இடையில்தான் நேரடிப் போட்டி என்கிறார்கள்.
வேட்பாளர்களை நிறுத்தியுள்ள ஒவ்வொரு கட்சியும் ஒரு கணக்கோடு வியூகம் வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது. தங்களது வாக்கு வங்கியைக் காட்டி, செல்வாக்கை சொல்ல திட்டமிட்டுள்ளன என்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ள மநீம, களமிறங்காத பாமக, உள்ளிட்ட கட்சிகளும் எதிர்காலத்தை கணக்கில் கொண்டே காய் நகர்த்தியுள்ளன. வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளவர்களில் மேலும் சிலரும் வாபஸ் பெறுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று திமுக திட்டமிடுகிறது. ஓபிஎஸ் பிரச்சினை தீர்ந்துள்ளதால், கடந்த முறை கூட்டணிக் கட்சி விட்டதை பிடித்து, வெற்றிக்கு கடும் முயற்சி செய்து, கட்சிக்குள்ளும் கொங்கு மண்டலத்திலும் செல்வாக்கை காட்ட வேண்டும் என்கிற கணக்கில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது என்கிறார்கள்.
கடந்த தேர்தலில் 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று, மூன்றாமிடத்தைப் பெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இப்போது இரண்டாம் இடத்தைப் பெற்று, எதிர்க்கட்சி நாங்கள்தான் என்று நிரூபிக்க முனைகிறார்கள். தனித்து நின்று பெறும் வாக்குகளை காட்டி, வரும் மக்களவைத் தேர்தல் கூட்டணியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை உறுதி செய்ய தேமுதிக முயற்சிக்கிறது என்கிறார்கள்.
இவை எல்லாம் வரும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் என்றாலும், இடைத் தேர்தல் களம் அதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, முன்பை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, வெற்றி இல்லை என்றாலும் கடும் போட்டி, முதலிடம் லட்சியம் என்றாலும் இரண்டாமிடம் நிச்சயம், கணிசமான வாக்குகளைப் பெற்று, களத்தில் நிற்பது என கட்சிகளின் கணக்குகள் இருக்கின்றன என்கிறார்கள்.
ஆனாலும், மாநிலத்தில் ஆளும் திமுகவின் ஆதரவுடன் உள்ள காங்கிரஸ் வேட்பாளர், மத்தியில் ஆளும் பாஜக ஆதரவுடன் உள்ள அதிமுக வேட்பாளர் இருவருக்கும் இடையில்தான் கடும் போட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. உறுதியாகும் இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவை ஊக்கத்தை மட்டுமல்ல வெற்றியையும் கொடுக்கும் என்கிறது அதிமுகவின் கணக்கு. தொகுதியில் நன்கு அறிமுகமான வேட்பாளராக மட்டுமின்றி, முதலில் களமிறமிறங்கியது, ஆளுங்கட்சி, அமைச்சர்கள், தலைவர்களின் தீவிர பிரச்சாரம், வியூகம் வெற்றியை வசமாக்கும் என்கிற நம்பிக்கை கணக்கில் இருக்கிறது காங்கிரஸ் கட்சியின் தரப்பு.
திருப்பங்களுக்கு பஞ்சமில்லாத இந்த இடைத் தேர்தலில், யாருடைய கணக்கு பலிக்கப் போகிறது…? என்ன செய்யப் போகிறார்கள் ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள்…மார்ச் 2ம் தேதி வரை காத்திருப்போம்….
இந்த செய்தி குறித்த காணொளியை காண கீழே உள்ள லிங்கை பார்க்கவும்..







