மக்களவையில் அமளி ; எதிர்கட்சி எம்பிக்கள் 8 பேர் இடைநீக்கம்….!

மக்களவையில் காகிதங்களை கிழித்து வீசி அமளியில் ஈடுபட்டதால் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உட்பட 8 எதிர்கட்சி எம்பிக்கள் நடப்பு தொடரிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை தொடர்பாக விவாதம் நடைபெற்ற போது எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தியா- சீனா எல்லை பிரச்சனை குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள்காட்டி பேசினார்.

இதற்கு பாஜக எம்.பி. க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சபாநாயகர் ஓம் பிர்லாவும் வெளியிடப்படாத புத்தகங்களை மேற்கோள் காட்டுவது அவை விதிகளுக்கு எதிரானது எனத் தெரிவித்தார். ஆனால் ராகுல் காந்தி தொடர்ந்து இந்திய சீன எல்லை பிரச்சனை குறித்து பேசவே நேற்று நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் முடங்கின.

தொடர்ந்து இரண்டாவது நாளான இன்றும் குடியரசுத் தலைவரின் உரை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ராகுல் காந்தி இந்திய-சீனா எல்லை பிரச்சனை குறித்தும் அமெரிக்கா- இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் பேசினார். இதற்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தமானது அமெரிக்காவுக்கு சாதகமாக இருப்பதாக கூறியும் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காத்தை கண்டித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் காகிதங்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டனர்.

மீண்டும் அவை தொடங்கிய போது மத்திய நாடாளுமன்ற அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் அத்துமீறி நடந்துகொண்ட காரணத்துக்காக 374 -வது பிரிவின் கீழ் இந்த அமர்விலிருந்து 8 எம்பிக்களை நீக்கம் செய்ய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

இதையடுத்து இந்தியா தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்களான மாணிக்கம் தாகூர் (தமிழ்நாடு) , ஹிபி இடன் (கேரளா) , அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங் (பஞ்சாப்), குர்ஜீத் சிங் அவுஜ்லா – (பஞ்சாப்), பிரசாந்த் யாதோராவ் படோல் (மகாராஷ்டிரா), டீன் குரியகோஸ் (கேரளா), சாமளா கிரண் குமார் ரெட்டி (தெலங்கான) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சு. வெங்கடேசன் (தமிழ்நாடு)  உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் நடப்பு தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.