மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்காக சரக்கு வாகனத்தில் 951 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்துனர்.
மதுரை மாநகர் கோச்சடை வழியாக சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக
எஸ்.எஸ்.காலனி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான
காவல் துறையினர் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட கோச்சடை பகுதியில் அதிகாலையில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தினர். மேலும்
சரக்கு வாகனத்தில் இருந்த இருவரிடம் வாகனம் குறித்தும் அதில் உள்ள பொருட்கள்
குறித்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில்
அளித்துள்ளனர். இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் வாகனத்தை சோதனையிட்டனர்.
சோதனையின் போது சரக்கு வாகனத்தில் சரக்கு மூடைகளுக்கு நடுவே சிறு
சிறு பொட்டலங்களாக 951 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்திச் செல்வது
தெரிய வந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்த கோவை பீளமேடு முருகன்கோயில் வீதியைச் சேர்ந்த செந்தில்பிரபு(36), மதுரை மேலமாசி வீதி, சீனிவாசப்பிள்ளை தெருவைச் சேர்ந்த பிரபாகரன்(33) ஆகிய இருவரையும் எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்கவும்: இந்தியா எப்போதும் சிறந்த நண்பனாக இருக்கும்- ஃபிஜி பிரதமர்
விசாரணையின் போது ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை சரக்கு வாகனம் மூலம்
கடத்தி வந்து, மதுரையில் பதுக்கி வைத்து தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்கு
அனுப்ப திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, 951 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட சரக்கு லாரி வாகனம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 951 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் விற்பனை செய்ய இருந்த 951 கிலோ கஞ்சா கடத்தலை தடுத்து
நிறுத்தி இருவரை கைது செய்த நடவடிக்கையில் ஈடுபட்ட எஸ்எஸ் காலனி
காவல்துறையினரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.