“கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு நேரிடுவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று…

கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு நேரிடுவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், கழிவுநீர் அகற்றும்போது தொழிலாளர்கள் யாரேனும் உயிரிழக்க நேரிட்டால்,  இந்த உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

கழிவுநீர் அகற்றும் பணியின்போது படுகாயமடையும், நிரந்தர உடல் பாதிப்பு ஏற்படும் தொழிலாளர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.  இதர பாதிப்புகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்கவும் வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.  கழிவுநீர் அகற்றும் பணிகளின்போது ஏற்படும் மரணங்கள் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் கண்காணிப்பதில் எந்தத் தடையும் இல்லை. இது தொடர்பாக விரைவில் விரிவான உத்தரவு வெளியாகும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மக்களவையில் மேற்கோள் காட்டப்பட்ட மத்திய அரசின் தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் சுத்தம் செய்யும் போது 347 பேர் மரணமடைந்துள்ளனர்.  இதில், உத்தரப்பிரதேசம்,  தமிழகம், டெல்லியில் 40 சதவீத மரணங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.