பாகிஸ்தானில் பழமையான குருத்வாரா இடிப்பு – இந்தியா கண்டனம்!

பாகிஸ்தானில் 125 ஆண்டுகள் பழமையான குருத்வாரா இடிக்கப்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஃபரூகாபாத்தில் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க குருத்வாரா ஸ்ரீ குரு சிங் சபா சாஹிப் அண்மையில் இடிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது, புனிதமான சீக்கிய வழிபாட்டுத் தலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட கண்டிக்கத்தக்க மற்றும் திட்டமிடப்பட்ட நாசவேலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு எதிராக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

துரதிர்ஷ்டவசமாக, இது ஒரு தனிப்பட்ட சம்பவம் கிடையாது. முன்னரும் இதேபோன்ற சம்பவங்களை பார்த்துள்ளோம். சிறுபான்மை மதத்தவர் மற்றும் அவர்களது வழிபாட்டு தலங்கள் மீது குறிவைத்து தாக்கப்படுவது தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்த வேண்டும். சேதப்படுத்தப்பட்ட குருத்வாராவை விரைவில் சீரமைக்க வேண்டும். பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், அவர்களின் வழிபாட்டுதலங்கள், வன்முறைக்கு உள்ளாவதை தடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.