அதிமுக-வின் வியூகம் திமுகவிற்கு நெருக்கடியா…? கூட்டணி மாறும் கட்சிகள்…?

கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம் என்று சொல்லும் தி.மு.க கூட்டணிக் கட்சிகள்…. பா.ஜ.கவுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக சொல்லும் அ.தி.மு.க… இரண்டுக்கும் தொடர்பு என்ன…? தேர்தல் களம் எப்படி அமையும்…? விரிவாக…

கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம் என்று சொல்லும் தி.மு.க கூட்டணிக் கட்சிகள்…. பா.ஜ.கவுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக சொல்லும் அ.தி.மு.க… இரண்டுக்கும் தொடர்பு என்ன…? தேர்தல் களம் எப்படி அமையும்…? விரிவாக பார்க்கலாம்…

வரும் 2024 மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 6, 7 மாதங்கள் உள்ள நிலையில் தேசிய, மாநிலக் கட்சிகள் அதற்கான பணிகளைத் தொடங்கி விட்டன. கடந்த முறை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக ஒன்றிணைந்து தேசிய அளவில் I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ளன.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் 38 கட்சிகளை ஒருங்கிணைத்து தங்கள் பலத்தைக் காட்டியுள்ளது. ஆனால், இந்த கூட்டணியில் இருந்து முக்கிய கட்சியான அதிமுக விலகி, தங்கள் தலைமையில் தனிக்கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்துள்ளது.

40க்கு 40 திமுக நம்பிக்கை

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது அந்த கூட்டணியில் மட்டுமல்ல, I.N.D.I.A கூட்டணியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் ’’சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக அதிமுக-பாஜக மோதல் செயற்கையாக நடந்துள்ளது. ஆனாலும் தேர்தலுக்கு பிறகு அந்த கூட்டணிக்கு அதிமுக செல்லும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன. எனவே இந்த பிரிவு நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். அவர்கள் சேர்ந்து போட்டியிட்டாலும் தனித்து போட்டியிட்டாலும் எங்க கூட்டணிதான் வெல்லும். கடந்த 2004 போல் 2024 தேர்தலிலும் 40க்கு 40 வெல்வோம்’’ என்று திமுகவினர் உறுதியாக சொல்கின்றனர். .

கூடுதல் தொகுதிகளில் போட்டி

கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் 9 மற்றும் புதுச்சேரி என 10 இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் தலா 2 இடங்கள், விசிக 2, மதிமுக 1, கொங்கு நாடு மக்கள் கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, இந்திய ஜனநாயகக் கட்சி 1 என போட்டியிட்டன. இதில், தேனியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஓபி ரவீந்திரநாத் மட்டுமே அந்த கூட்டணியில் வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும் தமிழ்நாட்டில் 38, புதுச்சேரி என மொத்தம் 39 தொகுதிகளில் திமுக கூட்டணியே வென்றது. கடந்த முறை 20 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது.

ஈரோட்டில் மதிமுக, விழுப்புரத்தில் விசிக, பெரம்பலூரில் ஐ.ஜே.கே, நாமக்கல்லில் கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. காங்கிரஸ், சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன், ராமநாதபுரத்தில் I.U.M.L ஆகிய கட்சிகள் அவரவர்களின் கட்சி சின்னத்திலும் போட்டியிட்டனர். ஆனால், தேசிய அளவிலும் மத்திய அரசிலும் முக்கிய பங்காற்றும் வகையில், இந்த முறை 25 தொகுதிகளுக்கு மேல் திமுகவே நேரடியாக போட்டியிட விரும்புகிறது என்கிறார்கள்.

கூட்டணியில் கூடுதல் கட்சிகள்

வாக்கு வங்கியுள்ள பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கூட்டணி நிலைப்பாடு குறித்த முடிவை அறிவிக்காமல் உள்ளனர். டிசம்பருக்குப் பிறகே அறிவிப்போம் என்கிறார்கள். அதேநேரத்தில், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் கூடுதல் கட்சிகள் வந்தால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கான எண்ணிக்கையை குறைக்கலாம் என்கிறார்கள்.

ஒரே தொகுதியை இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள் கேட்பது உள்ளிட்ட காரணங்களினால், தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள். திமுக மட்டுமல்ல அதன் கூட்டணிக் கட்சிகளும் வரும் தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட விரும்புகின்றன. அதற்கேற்ப தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் அவர்கள் அடையாளம் கண்டுள்ளன என்கிறார்கள்.

சொந்த சின்னத்தில் விருப்பம்

குறிப்பாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ’’கடந்த் 2019ம் ஆண்டு தேர்தலை விட இந்த முறை கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம்’’ என்று வெளிப்படையாகவே தெரிவித்தும் வருகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, ஒரு தொகுதியில் திமுக சின்னத்தில் விசிக போன்ற கட்சிகளும் இந்த முறை தங்களுடைய சின்னத்தில் போட்டியிடவும் விரும்புகின்றன என்கிறார்கள். முக்கியமா, கூடுதல் தொகுதிகள் கிடைக்கிறதோ இல்லையோ கடந்த முறையைவிட குறைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றன என்கிறார்கள்.

குறிப்பாக, திமுக-வின் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்திருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ’’கடந்த முறையோடு ஒப்பிடுகையில், இப்ப தொகுதிகள் மாறுபடலாம். ஆனால், எண்ணிக்கை மாறுபடக் கூடாது’’ என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சிதம்பரத்தின் பேட்டி

மேலும், ’’மதுரை மாநாடு அதிமுக-வின் பலத்தை காட்டுகிறது’’ என்று முன்பு குறிப்பிட்ட சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம். வரும் ‘’நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றிபெறும். கடந்த தேர்தலைபோல் இந்த முறையும் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு’’ என்று சொல்லியிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட காரணங்களினால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சில அதிமுக- கூட்டனிக்கு செல்லும் வாய்ப்புள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சியினர், “அதிமுக கூட்டனியில் இருந்து அழைப்பும் வரவில்லை. வந்தாலும் அந்த கூட்டணியில் சேர மாட்டோம்’’ என்று உறுதிபடுத்தியுள்ளனர். ஆனால், அரசியலில் கடைசி நேரத்திலும் மாற்றம் நடக்கும். இதற்கு கடந்த கால வரலாறுகளே சாட்சியங்களாக உள்ளன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அதிமுக-வை விரும்பும் கட்சிகள் ?

அதிமுக-வின் 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்களுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சி நிர்வாகிகளிடம், ’’பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை. இதை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்’’ என்று மீண்டும் திட்டவட்டமாக சொன்ன வர், ’’நிறைய கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன’’ என்றும் சொல்லியுள்ளார் என்கிறார்கள்.

இந்த தகவல் வெளியானதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி எதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளாரா? திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இப்படிச் சொல்லப்படுகிறதா? என்கிற கேள்வியும் எழுகிறது என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் ஐ.ஜே.கே தவிர ஏற்கனவே உள்ள கட்சிகள் உறுதியாக தொடர்கின்றன. கூடுதல் கட்சிகள் சேரத்தான் வாய்ப்புள்ளதே தவிர, எந்த கட்சியும் விலகாது. தொகுதிப் பங்கீடு சிக்கல் என்பதெல்லாம், ஒவ்வொரு தேர்தலின் போதும் ஏற்படுவதுதான். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்படாது என்கிறார்கள் I.N.D.I.A கூட்டணியினர்.

அதேநேரத்தில், நீண்ட காலம் சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் விடுதலை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியை அடுத்தடுத்த்து சந்தித்து வரும் கட்சித் தலைவர்கள், 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிரடி மாற்றங்களுக்கும் வாய்ப்புள்ளதையும் மறுக்க முடியாது என்கிறார்கள்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது, 2024 தேர்தல் களம் எப்படி அமையும்…? யார் வியூகம் வெல்லும்…? திமுக எதிர்பார்க்கும் 2004 தேர்தல் போல் 40க்கு 40 முடிவு….., அதிமுக எதிர்பார்ப்பது போல் 2014(தனித்து 37 இடங்களில் வெற்றி) தேர்தல் முடிவு… எந்த வரலாறு 2024ல் திரும்பும்…?

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.