‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டில் ஆய்வுக்கூட்டம்! 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில்  ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு…

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில்  ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்யும் “கள ஆய்வில்  முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் முதன் முறையாக வேலூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.  அதனைத் தொடர்ந்து,  பல மாவட்டங்களில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ்  முதலமைச்சர்  ஆய்வு மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செல்லும் வழியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்துள்ள பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அலுவலகத்தின் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை ஆய்வு செய்த  முதலமைச்சர் , பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள ஊரக வளர்ச்சி மாநில நிறுவனத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட, ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வளர்ச்சி பணிகள், மற்றும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.