2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே உள்ள சூழலில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வரும் 23-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவர்கள் கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://x.com/AIADMKOfficial/status/2002297610481381750
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாக ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தKMA. சீமான் மரைக்காயர், (மண்டபம் பேரூராட்சிக் கழகச் செயலாளர்) L. சீனி காதர்மொய்தீன் (மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர், மண்டபம் பேரூராட்சிக் கழக மாவட்டப் பிரதிநிதி) M.A.பக்கர், (மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர்) S. ஹமீது அப்துல்ரகுமான் மரைக்காயர், (மண்டபம் பேரூராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) ஆகியோர், இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சி நிர்வாகிகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







