நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழ்நாட்டின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் .
அதன்படி, கடந்த நவ.15ம் தேதி நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. ரூ.5.90 ஆக இருந்த முட்டை கொள்முதல் விலையை ஒரே நாளில் 5 காசுகள் உயர்த்தி ரூ.5.95 ஆக நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்தது. இதன் காரணமாக, சென்னையில் முட்டை ரூ.6.60க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையை இன்று 05 காசுகள் உயர்த்தி ரூ.6.30 ஆக விலை நிர்ணயம் செய்துள்ளதாக நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் முட்டை ரூ.6.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.







