பிரதமர் மோடியின் புகழாரம் – காங்கிரஸ் தலைவரின் பாராட்டு! தேர்தல் 2024 – வெப்பத்தை தணித்த மழை

பா.ஜ.க, காங்கிரஸ் தலைவர்களிடையே கடுமையான கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்னாள் பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து, பாராட்டு பெற்றுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்…. மக்களவைத் தேர்தல்…

பா.ஜ.க, காங்கிரஸ் தலைவர்களிடையே கடுமையான கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்னாள் பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து, பாராட்டு பெற்றுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்….

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் கூட்டணி வியூகம், அறிக்கை தயாரிப்பு, தொகுதிகள் பங்கீடு என கட்சிகள் பரபரக்க தொடங்கி விட்டன. கருத்து கணிப்புகளும் அவற்றின் அடிப்படையில் களமிறங்கவும் கட்சிகள் காத்திருக்கின்றன. தீவிர பிரச்சாரத்திற்கு ஆயத்தமாகி வரும் தலைவர்கள், காரசார குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் தொடங்கி விட்டனர்.

பிரச்சாரத்தை முந்திய விமர்சனங்கள்

குறிப்பாக ‘’தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வென்று ஆட்சியமைப்போம். ஆனால், காங்கிரஸ் 40 இடங்களில் கூட ஜெயிக்காது. எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது…’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களும் முன்னாள் பிரதமர்களுமான ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி மீது விமர்சனங்களையும் பிரதமர் மோடி முன்வைத்தார்.

இதற்கு பதிலடியாக, ‘’மத்திய பாஜக அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றி விட்டது. சாதனைகள் என்று எதையும் சொல்ல முடியாததால், மறைந்த தலைவர்களை அவதூறு செய்கிறார்கள்’’ என்று காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினையாற்றினர்.

வெள்ளை அறிக்கை Vs கருப்பு அறிக்கை

இவை ஒருபுறமிருக்க, ‘’கடந்த 2004 – 2014 காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மோசமான நிர்வாகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். சொன்னபடி வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ‘’வாராக்கடனால் வங்கிகளும் தவறான கொள்கைகளால் பொருளாதாரமும் பலகீனமாக இருந்தன. ஊழல் மலிந்திருந்தது’’ என்பது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டிள்ளார்.

நிதிநிலைக்குழு தலைவரும் பாஜக எம்.பியுமான ஜெயந்த் சின்ஹா பேசுகையில், ‘’மத்திய அரசின் வெள்ளை அறிக்கை, பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014ம் ஆண்டுக்கு முன்பும் அதற்கு பின்னருமான இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைக்கிறது. குறிப்பாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தில் 5ல் ஒன்றாக இருந்தது. ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. பணவீக்கம் 10 சதவீதமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு ஆபத்து – கார்கே

நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசு குறித்து கருப்பு அறிக்கையை வெளியிட்டார். அதில், ’’நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தனது அரசின் தோல்விகளை மறைக்கிறார். ஆனால், அரசின் தோல்வி குறித்து நாங்கள் பேசினாலும் கண்டுகொள்வதில்லை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்னையாக உள்ளது.

பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் இந்த அரசு தோல்வியடைந்து விட்டது. ஆகையால் கருப்பு அறிக்கை வெளியிட்டு அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துச் சொல்கிறோம். மாநில அரசுகளை கவிழ்த்து, ஜனநாயகத்தை அழிக்கிறார்கள்….” என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

திருஷ்டி பொட்டா பார்க்கிறேன் – பிரதமர்

நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் போது, காங்கிரஸ் வெளிட்டுள்ள இந்த கருப்பு அறிக்கையை ஒரு திருஷ்டி பொட்டாக பார்க்கிறோம் என்றார் பிரதமர் மோடி. இப்படி பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கடுமையான கருத்து மோதலுக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரை பிரதமர் புகழ்ந்துள்ளதும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பத்தாண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 68 பேரின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் புதிய உறுப்பினர்கள் தேர்வுக்கு பிறகுதான் நடைபெறும் என்பதால், பதவிக் காலத்தை நிறைவு செய்யும் மாநிலங்களவை பிரிவு உபச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மன்மோகன் சிங்கிற்கு புகழாரம்

அப்போது, “இந்த நாட்டுக்கும் நாடாளுமன்றத்திற்கும் வழி காட்டி மகத்தான பங்களிப்பை மன்மோகன் சிங் செய்துள்ளார். அவரது சிறந்த சேவைக்காக எப்போதும் நினைவுகூரப்படுவார். குறிப்பாக, டெல்லி மாநில அரசு நிர்வாக திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பின் போது, சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.
உடல் நலமில்லாத போதும் அவைக்கு வந்து மன்மோகன் சிங் வாக்களித்தது, அவரது கடமை உணர்வை காட்டியது. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். அவர் யாரை ஆதரித்தார் என்பதை விட, ஜனநாயகத்தை ஆதரித்தார் என்பேன்” என்றார் பிரதமர் மோடி.

மோடியை பாராட்டிய கார்கே

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டிய இன்னாள் பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். அப்போது , ‘’ குறைகளை மனதில் வைக்க வேண்டும். நல்லவற்றை பாராட்ட வேண்டும்’’ என்றும் மல்லிகார்ஜுன் கார்கே அப்போது குறிப்பிட்டார். கடும் விமர்சனம் எனும் இடிகளுக்கு இடையில் வந்த பாராட்டு என்னும் மழை பெய்துள்ளது. இது அரசியல் வெப்பத்தை சற்று தணித்திருக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள். தொடருமா மழை..?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.