அஜித்தின் ‘வாலி’ படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக கால் பதித்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தனது முதல் படத்திலேயே தென்னிந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். இரண்டாவது படமான விஜய் நடித்த ‘குஷி’ படத்தின் வெற்றி மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது என்றே சொல்லலாம். இந்த படம் இந்தியா முழுக்க பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டானது. இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, ‘நியூ’ படத்தில் நடிகராகவும் களமிறங்கி திரையுலகை வியப்பில் ஆழ்த்தினார் எஸ்.ஜே. சூர்யா.
தொடர்ந்து பல விதமான பாத்திரங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திழுத்தார். இந்திய திரையுலகமே கொண்டாடும் முன்னணி நட்சத்திர நடிகராக ஆளுமை கொண்டுள்ளார். ‘நடிப்பு அரக்கன்’ எஸ்.ஜே.சூர்யா என்று பல மொழி ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் அவர் இயக்குநராக எப்போது படம் தருவார்? என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர் புதிய படத்தை இயக்கி நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ‘கில்லர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரபல நடிகை பிரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் 27 பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘கில்லர்’ படப்பிடிப்பின் சண்டைக் காட்சியின்போது எஸ்.ஜே.சூர்யா காலில் அடிபட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி, படக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் சில வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.







