கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்!

கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக திட்டமிட்டது.  இந்த விவகாரம்…

கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக திட்டமிட்டது.  இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று விவாதம் நடத்தப்பட்டது.
உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விளக்கமளித்தார்.

நேற்று,  இவ்விவகாரம் குறித்துப் பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் கூறியும் கேள்வி நேரத்தின்போது அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.  பின்னர், முதலமைச்சர் வேண்டுகோளின் பேரில் அதிமுகவினரை சபாநாயகர் அவைக்குள் அனுமதித்த பிறகும், விவாதத்தில் பங்கேற்காமல் புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர்.  இதையடுத்து சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் தொடங்கியது.  சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார்.  இந்த சமயத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு,  நினைத்த நேரத்தில் நினைத்ததை பேசும் இடம் சட்டசபை அல்ல. வினா விடை முடிந்ததும் பேசுவதற்கு அனுமதி தருகிறேன்.  முதல்வராக இருந்த உங்களுக்கு தெரியாதா என எடப்பாடி பழனிசாமியை பார்த்து சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர் பின்னர் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

“கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவே அவையில் பேச அனுமதி கேட்டோம்,  ஆனால் தரப்படவில்லை.  மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.  இது மக்களின் உயிர் பிரச்சனை என்பதால் அவையில் விவாதிக்க அனுமதி கேட்டோம்.  கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 183 பேரில் 53 பேர் உயிரிழந்ததாக செய்தி கூறுகிறது.

விஷ முறிவு மருந்து இருப்பு இல்லை என நான் கேட்டதற்கு வயிற்று புண்ணுக்கான மருந்து ஸ்டாக் இருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.  நான் சொன்ன மருந்து வேறு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன மருந்து வேறு..  தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதே 53 பேர் பலியாக காரணம்.

கள்ளச்சாராயம் குடித்தவர்கள் காலதாமதமாக மருத்துவமனை வந்ததே பலர் பலியாக காரணம் என கூறப்படுகிறது.  இதற்கு அரசு தான் காரணம்.  கள்ளச்சாராயத்தால் உயிர்கள் பலியான நிலையில்,  கள்ளக்குறிச்சி ஆட்சியரோ அரசுக்கு ஆதரவாக பொய் கூறியுள்ளார். வலிப்பு வந்ததால் ஒருவர் பலி,  வயது முதிர்வின் காரணமாக மற்றொருவர் பலி என ஆட்சியர் கூறிய பொய்யால் பலர் பலி.  தி.மு.க. அரசின் போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது.  கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.