பாகிஸ்தான் : இஸ்லாமாபாதில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு – 15 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 80 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் குண்டுவெடிப்பினால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி பெரும் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை எந்த அமைப்பும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாதிகள் பயங்கரவாத தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் தலைநகரிலேயே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.