தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் வடமாநிலப் பெண் ஒருவருக்கு, சூளைக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை கொடுத்த வழக்கில் இருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஐந்தாண்டுகால அறிவாலயம் ஆட்சியில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளும், கைதுகளும் தான் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனவே தவிர, குற்றங்கள் ஏனோ குறைந்தபாடில்லை.
அதிலும் குறிப்பாக திமுக ஆட்சியில் வடமாநிலப் பெண்கள் மீதும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீதும் தொடரும் வன்முறையானது, வரம்பின்றி நீண்டு கொண்டிருக்கிறது. பொதுவெளியில் கொஞ்சம் கூட தார்மீகப் பொறுப்பின்றி வட இந்தியர்களை வடக்கன், பானிபூரி விற்பவன், டேபிள் துடைப்பவன் எனத் திமுக தலைவர்கள் தொடர்ந்து இழிவாகப் பேசுவது தான் இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கான தூண்டுகோல் என்பதை ஆளும் தலைமை இன்னும் உணர்ந்து கொள்ளாதது அறியாமையின் உச்சம்.
வேற்றுமையில் ஒற்றுமையைப் போற்றும் நமது பாரதத்தில், தமிழகத்தில் மட்டும் மற்ற மாநிலத்தவர்களை மாற்றாந்தாய் மனப்போக்குடன் அணுகும் திமுக-வின் பிளவுவாத அரசியலுக்கு சமாதி கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







