“விவசாயி  மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை” – உயர்நீதிமன்றம் கருத்து!

திருவண்ணாமலை மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயி  மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா…

திருவண்ணாமலை மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயி  மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட்டின்
3-வது திட்ட விரிவாக்கப் பணிக்காக 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் நிலத்தைக்
கையகப்படுத்தப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய நிலையில்,  அவர்கள் மீது பதிவான 11 வழக்குகளளின் அடிப்படையில், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் அருள் ஆறுமுகம்,  பச்சையப்பன்,  தேவன்,  சோழன்,  திருமால்,  மாசிலாமணி,
பாக்கியராஜ் ஆகிய 7 பேரை குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில்,  6 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை திரும்பப் பெற்ற அரசு, அருள் ஆறுமுகத்தின் மீதானகுண்டர் சட்டத்தை மட்டும் ரத்து செய்யவில்லை.இந்நிலையில்,  திருவண்ணாமலை மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி பூவிழி கீர்த்தனா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை  நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு இன்று விசாரித்தது.

இதனையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:

“எந்த ஒரு தீவிர குற்றத்திலும் ஈடுபட்டதற்கான முகாந்திரமும் இல்லாத நிலையில் மக்களை தூண்டினார் என்றும்,  நிலம் வழங்க முன்வருபவர்களை தடுத்ததார் என்றும் குற்றம் சாட்டப்படுள்ளது.

100 நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடந்துள்ள நிலையில், உள்நோக்கத்தோடு தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.

மேலும் விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் திட்டம் குறித்த விவரங்கள், கருத்துக்கேட்பு கூட்டம் மற்றும் விசாரணை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம்,  காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை வரும் ஜன. 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.