தமிழ் நாடு சட்டமன்றத்தில் 2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, கடந்த 5 வேளாண்மை நிதி நிலை அறிக்கைகளில் வேளாண்மைத் துறைக்கு ரூ. 1,94,076 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் ரூ.178 கோடி செலவில் 21,35,000 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.707 கோடியில் 61,00,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 58,712 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக 900 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு 70,000 விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
முதலமைச்சரின் 1,000 உழவர் நல சேவை மையங்கள் திட்டம் மூலம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் பட்டதாரிகள், பட்டயதாரர்களுக்கு 30 % மானியமாக 3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மதிப்பு கூட்டு பொருள்கள் திட்டத்திற்காக ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. மேலும் 32 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
456 பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ 4.56 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்திற்கு ரூ. 19 கோடி வரை நிதி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக 17,340 பேர் பயன்பெற்றுள்ளனர். மக்காச்சோளம் சாகுபடி பரப்பு 12 லட்சம் ஏக்கராக உயர்த்தப்பட்டுள்ளது.
உழவர்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும் காய்கறிகள், பழங்கள் நுகர்வோர்க்கு அன்றாடம் கிடைக்கவும் 194 உழவர் சந்தைகள் செயல்பட்டுவருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. 134 உழவர் சந்தைகள் ரூ. 46.45 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிப் பகுதிகளில் 30 நடமாடும் காய்கனி அங்காடிகளும், மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை வீதம் 37 மாவட்டங்களில் மாலை நேரங்களில் உழவர் சந்தைகளும் இயங்கி வருகின்றன. அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், உழவர் சந்தைகளுக்கு வரும் காய்கனிகளின் தினசரி வரத்து 2,500 மெட்ரிக் டன்னாகவும், தினசரி பொதுமக்களின் வருகை தற்போது 4 இலட்சமாகவும் அதிகரித்துள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.







