அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகள் நடைபெறுவதாக அடுத்தடுத்து முறையிட்டுள்ளனர். இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்…
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள், தலைவர்கள் என தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பிரச்சாரத்தை தொடங்கி விட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் கமல் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்,
‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம். எதிர்த்து போட்டியிடும் ஒருவருக்கும் டெபாசிட் கிடைக்காது’ என்கிறார்கள் திமுகவினர். திமுகவின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, முத்துசாமி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு, வீடு விடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
’கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தவற விட்டதை, இப்போது பிடித்து விடுவோம். இந்த தேர்தல் ஒரு திருப்புமுனையாக இருக்கும்’ என்கிற அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் வேலுமணி, தங்கமணி, கே.வி.ராமலிங்கம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். நான்கு முனைப் போட்டி என்றாலும் திமுக – அதிமுக இடையில் தான் கடும் போட்டியாக களம் மாறியுள்ளது.
இந்நிலையில், ’தேர்தலில் முறைகேடுகள் நடக்கிறது. போலி முகவரியில், சுமார் 40 ஆயிரம் வாக்காளர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் மாநில தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
இவர்கள் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சியான, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம்., தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் விபரம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. . தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
மேலும், திமுக, அதிமுகவினரால், விதிகளை மீறி அமைக்கப்பட்ட 14 தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 110 புகார்கள் வந்துள்ளது. உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 48 லட்சத்திற்கு மேல் பிடிபட்டுள்ளது என்று நடவடிக்கைகளை அடுக்குகிறார் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார்.
இதனையும் படியுங்கள்: பெரம்பூர் கொள்ளை சம்பவம்-குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்!
ஆனாலும், அடுத்தடுத்த புகார்கள், நகர்வுகளை எல்லாம் பார்க்கும் போது ஈரோடு கிழக்கு தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்கிற கேள்வி எழுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதிமுக ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டதையும் முன் உதாரணமாகவும் சொல்கிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிப்பு முதல் தற்போது வரை பல எதிர்பாராத திருப்பங்களை ஈரோடு இடைத் தேர்தல் சந்தித்து வருகிறது. இதன்படி, அடுத்த திருப்பத்தை நோக்கி நகர்கிறதா ஈரோடு கிழக்கு தொகுதி என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இது குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் சொல் தெரிந்து சொல் பகுதியில் வெளியான காணொளியைக் காண ..