“மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன!” – திருப்பூரில் அண்ணாமலை பேச்சு!

மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட என் மண் என் மக்கள்  யாத்திரை துவக்க விழா அவிநாசியில் இன்று…

மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட என் மண் என் மக்கள்  யாத்திரை துவக்க விழா அவிநாசியில் இன்று தொடங்கியது.  அவிநாசி சேவூர் சாலையில் தொடங்கிய யாத்திரையை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  கொட்டும் மழையிலும்  பயணம் தொடர்ந்து நடைபெற்றது.

தொடக்க நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சமீபத்தில் சிலை சேதப்படுத்தப்பட்டது.  இந்துகளுக்கு பாதுகாப்பில்லாத மற்றும் சிலை திருட்டை வேடிக்கை பார்க்கும் அரசாக திமுக உள்ளது. அரசின் அறிக்கையின் படி 1992-2017 வரை காணமல் போன சிலைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல்.  மத்தியில் காங்கிரஸோடு கைகோர்த்து அங்கம் வகித்த திமுக எத்தனை சிலைகளை மீட்டு வந்துள்ளது?

மோடி பதவியேற்ற பின் 361 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.  9 ஆண்டுகளாக ஒவ்வொரு நாட்டுடனும் போராடி சிலையை மீட்டு வருகிறார்.  அறநிலையத்துறை தமிழகத்தின் நம்பர் 1 திருடன்.  அதைத் தான் தெலுங்கானாவில் பேசிய பிரதமர் மோடி,  தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெறுகிறது என்று கூறினார்.

எங்களுடைய பிரதமர் பொய் சொல்ல மாட்டார் மிஸ்டர் ஸ்டாலின்.  அவரின் வாக்கு திண்டுக்கல் பூட்டு போல உறுதி.  2024 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவீர்கள் என நம்புகிறோம்.  அதிமுக ஆட்சி முடியும் போது அத்திக்கடவு அவிநாசி திட்டம் 83% நிறைவடைந்தது .  ஆனால் திமுக பொறுப்பேற்று 30 மாதமாகியும் இன்னும் 17% கூட நிறைவடையவில்லை.

திருப்பூரில் வரும் டிசம்பர் மாதம் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.  தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எம்.பிக்கள் இல்லை.  ஆனாலும் பணியாற்றி கொண்டிருக்கிறோம்.  2 நாட்களுக்கு முன் திமுக மகளிர் உரிமை மாநாடு என்ற நாடகம் நடத்தினர்.

2010-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 33% மகளிர் இடஒதுக்கீடை கொண்டு வந்து ராஜ்யசபாவில் கொண்டுவராமல் ஏமாற்றியது காங்கிரஸ்.  கனிமொழி தன் சகோதரர் மகன் சனாதனம் குறித்து பேசி இந்தியா முழுவதும் பிரபலமானதால்,  ஏதாவது செய்து தானும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இந்திய பெண் தலைவர்களை அழைத்து வந்து மாநாடு நடத்தியுள்ளார்.

356-ஐ திமுக மேல் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது . ஆனால் பிரதமர் ஜனநாயக முறையில் ஆள்கிறார்.  மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

இவ்வாறு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.