“மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பறையில் வைக்கப்படும்” – தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பறையில் வைக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “2026-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 4.5.2026 அன்று 62 (எண்ணிக்கை) வாக்கு எண்ணும் மையங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் / தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணுகை முகவர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது.

வாக்கு எண்ணுகை நடைமுறையின்போது தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும்/ தேர்தல் முகவர்களும் வாக்கு எண்ணுகையிட முகவர்களும் இருந்தனர். வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னர், வேட்பாளர்களின் / அவர்களது பிரதிநிதிகளின் முன்னிலையில், கண்காணிப்புக் கேமரா (CCTV) மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பின் கீழ், வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளிலிருந்து (VVPATs) அவற்றின் சீட்டுகள் (VVPAT Slips) வெளியே எடுக்கப்பட்டு, சட்டப்படிக்கான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படுவதற்காக கருப்பு நிற உறைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வேட்பாளர்கள் / அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் காப்பறையில் பாதுகாப்பாக வைப்பதற்கு முன்னர், வேட்பாளர்கள் / அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூடி முத்திரையிடப்பட்டுள்ளன.

தேர்தல் புகார் மனுக்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றம் இறுதி செய்யும் வரையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறையின்படி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். தேர்தல் புகார் மனு குறித்த நேர்வில், தேர்தல் புகார் மனு இறுதியாக தீர்வு செய்யப்படும் வரையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பறையில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.