“மாயமானும் மண்குதிரையும்” என ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் விமர்சனம்…

மாயமானும் மண்குதிரையும் சேர்ந்தது போன்றது ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் முட்டல் மோதலில்…

மாயமானும் மண்குதிரையும் சேர்ந்தது போன்றது ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் முட்டல் மோதலில் தொடங்கி, வழக்குகள் என தொடர்ந்து தற்பொழுது அதிமுக கட்சியையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியின் கொடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுடனான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இந்த சந்திப்பை தொடர்ந்து, ஓபிஎஸ் சசிகலாவை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அதிமுகவில் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் அதிமுக கட்சி அலுவலகத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஓ பன்னீர்செல்வமும் – டி.டி.வி.தினகரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசியுள்ளனர். டிடிவி தினகரன் ஓபிஎஸ் சந்தித்த போது பன்னீர் செல்வத்துடன் இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் ஆகிய மூன்று பேரும் எங்கே போனார்கள்?. அவர்கள் ஓபிஎஸ்ஐ கைவிட்டு விட்டனர்.

எங்களைப் பொறுத்த வரைக்கும் மாயமானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்தது போன்றது ஓபிஎஸ் – டிடிவி சந்திப்பு. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான். அப்படித்தான் அவர்களது சந்திப்பை நாங்கள் பார்க்கிறோம்.

டிடிவி தினகரன் ஓபிஎஸ்-ஐ துரோகி என குறிப்பிட்டார். அதற்கு ஓபிஎஸ்-ம் டிடிவி தினகரனை துரோகி என்று குறிப்பிட்டார். ஆனால் இப்பொழுது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியை உருவாக்குவதாக கூறியிருக்கின்றனர்.

மேலும், டிடிவி தினகரன் கூடாரம் ஏற்கனவே காலியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த நிலையாக உள்ளது. பண்ருட்டி ராமச்சந்திரன் எங்கே சென்றாலும் அந்த கட்சி அவரோடு முடிந்துவிடும். அவர் எந்த கட்சிக்கும் விசுவாசம் இல்லாமல் இருந்தவர். கிளைச் செயலாளராக இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கிடையாது.

ஆவின் முறைகேடு தொடர்பாக பலமுறை புகார் செய்யப்பட்டதால் தான் அமைச்சர் நாசர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் இவர்கள் செய்த சாதனை ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் மட்டும்தான். அதனால் தான் ஊழல் தொடர்பான ஆடியோ வெளியான உடனே இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திமுகவின் தூண்டுதலின் பேரில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனை சட்டரீதியாக சந்திப்பேன். ஓபிஎஸ் – சபரீசன் சந்திப்பின் மூலம் திமுகவின் ஆதரவாளராக ஓபிஎஸ் உள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதன்முலம் ஓபிஎஸ் திமுகவின் ‘B’ டீம் என்பது நிரூபணமாகி விட்டது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.