நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை நடிகை ரம்யா கிருஷ்ணன் கண்டு களித்தார்.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள் : “நிச்சயமாக திறம்பட செயல்படுவேன்”- அமைச்சராக பொறுப்பேற்றபின் ‘டிஆர்பி ராஜா’ பேட்டி
சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு இருக்கும் ரசிகர் படை மிகப்பெரியது. அணி தோல்வியுற்றாலும் பரவாயில்லை, ’தல’ தோனியின் பேட்டிங்கை பார்த்தாலே போதும் என்ற மனநிலையே பெரும்பாலான ரசிகர்களிடம் உள்ளது. பொதுவாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி விளையாடும் ஐபிஎல் போட்டியைக் காண அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வருவது வழக்கம்.
அந்த வகையில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன், நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியைக் காண வருகை தந்திருந்தார். அவர் போட்டியைக் கண்டு ரசிக்கும் வகையிலான புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.








