முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு எந்தந்த கட்சிகள் போட்டியிடலாம் என்பது பற்றியும், வேட்பாளர்களாக யார் யார் களமிறங்க வாய்ப்புள்ளது என்பது பற்றியும் பார்ப்போம்… 

ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து, 26 ஆயிரத்து, 876 வாக்காளர்கள் உள்ளனர்.இதில்1 லட்சத்து, 10 ஆயிரத்து 713 ஆண் வாக்களர்களும்,1 லட்சத்து, 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், 23 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர். 2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் முதன் முறையாக தேமுதிகவின் சந்திரகுமார், 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக வின் தென்னரசு, 2021 ஆம் ஆண்டில் திருமகன் ஈவெரா ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2021-ம் ஆண்டு, மே மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், திமுக கூட்டணியில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திருமகன் ஈவெரா, அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட யுவராஜாவை வீழ்த்தி எம்.எல்.ஏ வாக சட்டமன்றம் சென்றார். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ,உடல் நலக்குறைவால் திருமகன் ஈவெரா காலமானார்.

இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி கலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் ஜி கே வாசன் , தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி ஆகியோர் தங்களின் தேர்தல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டனர்.

அதன்படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரான ஜி கே வாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, அதிமுகவுடன் சுமுகமான உறவில்தான் உள்ளோம். இரண்டு கட்சிகளும் ஒண்றிணைந்து பேசி முடிவெடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் வேட்ப்பாளரை அறிவிப்போம். வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது இலக்கு என்று தெரிவித்திருந்தார்.

இவரத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரியும் ஈரோடு கிழக்கு தொகுதி எங்களுடைய தொகுதி, நாங்கள் நின்று வென்ற தொகுதி. எனவே இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் தான் போட்டியிடும். வேட்பாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு தொகுதியில் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மற்றொரு மகனான சஞ்சய் சம்பத்தை, இந்த இடைத் தேர்தலில் போட்டியிடச் செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் சஞ்சய் சம்பத்துக்கு அரசியல் ஆர்வம் குறைவுஎன்பதால், அந்த இடத்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் விட்டுக்கொடுக்கும்பட்சத்தில், மாவட்டத் தலைவர் மக்கள் ஜி. ராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல,ஈரோடு காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவரும், தற்போதைய கவுன்சிலருமான ஈபி.ரவி மற்றும் தற்போதைய மாவட்ட தலைவர் சரவணன் ஆகிய இருவரும் போட்டியிடத் தயாராக உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் பாஜக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை 14 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அமைத்தார். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்ட நிலையில் மீண்டும் இந்த இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

பாஜக தனித்து போட்டியிடுமா என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அதிமுக, பாஜக கட்சி தலைமைகள் முடிவெடுக்கும். தொகுதியில் யார் நிற்கிறார்கள் என்பது முக்கியமில்லை. 14 பேர் கொண்ட குழு என்பது தேர்தல் வேலைக்கான பணிக்குழு தானே தவிர வேறொன்றும் இல்லை என பாஜக சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக வரும் 23-ஆம் தேதி மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது. தேமுதிக ஏற்கனவே இந்த தொகுதியில், அதிமுக வட்டணியில் ஒருமுறை வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை, தன் அணியே அதிமுகவின் உண்மையான அணி என்பதை நிரூபிக்கும் வகையில், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அணியே நேரடியாக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக அணியும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதர கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு பின், இருமுனைப்போட்டியா, மும்முனை போட்டியா அல்லது நான்கு முனை போட்டியா என்பது வரும் நாட்களில் தெரியும். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் இடைத்தேர்தலாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் தற்போது அமைந்துள்ளது. முதல் இடைத்தேர்தல் என்பதால் களம் சூடாகவே இருக்கும். போட்டியும் கடுமையாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி-தோல்வியானது 21 மாதங்களாக நடைபெற்று வரும் , மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கும், இன்னொருபுறம் சிதறிக்கிடக்கும் அதிமுக அணிக்கும் மக்கள் அளிக்கும் மதிப்பீடாகவே அமையும் என்று பார்க்கப்படுகிறது.  எனினும் வெல்லப் போவது யார் என்பது, மார்ச் 2 ம் தேதி தெரியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுகவில் விதிமீறல் ; தலைமையகத்தை எங்களிடம் தாருங்கள் – தொண்டர்கள் அரசுக்கு கடிதம்

Web Editor

தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம்

Web Editor

பள்ளி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல்

EZHILARASAN D