முதல்முறையாக எப்போது அதிமுக தலைமையகம் சீல் வைக்கப்பட்டது ?

அதிமுகவில் தம்மை முழுமையாக ஒதுக்குகிறார்கள் என அறிந்தவுடன் கட்சியின் தலைமையகத்தை கைப்பற்றினார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி அக்கட்சியின் தலைமையகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த எம்.ஜி.ஆரின்…

அதிமுகவில் தம்மை முழுமையாக ஒதுக்குகிறார்கள் என அறிந்தவுடன் கட்சியின் தலைமையகத்தை கைப்பற்றினார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி அக்கட்சியின் தலைமையகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு அக்கட்சியில் பிரளயங்கள் ஏற்படுவது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது என்கின்றனர் ரத்தத்தின் ரத்தகங்கள். அதுபற்றி பார்ப்போம்.

அதிமுகவில் தமக்கு இடமில்லை இல்லை அது யாருக்கும் சொந்தமில்லை என்ற எண்ணத்தில் களமிறங்கியுள்ளார் ஓபிஎஸ். அதற்காக அக்கட்சியின் தலைமையகத்தை கைப்பற்றினார். அதனை தடுக்க முயன்றவர்கள் துவம்சம் செய்யப்பட்டனர். ரத்த களறியானது அதிமுக தலைமையகம் அமைந்துள்ளது சாலை. தகவல் அறிந்த காவல்துறை, அவர்களை தடியடி நடத்தி கலைத்தது. அதிமுக தலைமையகம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை எழுந்தவுடன் வருவாய்துறை அதிகாரிகள் அக்கட்டிடத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

முன்னதாக அங்கிருந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கலைந்து போக செய்தனர். இதுபோன்ற சம்பவம் அதிமுக தலைமையகத்திற்கு புதிததல்ல என்கிறது அதிமுக வரலாறு. எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும்போது எத்தனையோ பேர் மீண்டும் தாய் கழகமாக திமுகவிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் தொண்டர்கள் பலம் வாய்ந்த தலைவர்களாக இருந்ததில்லை. ஜெயலலிதாவை அதிமுகவுக்குள் எம்ஜிஆர் கொண்டுவந்த போது மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.டி.சோமசுந்தரம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

அத்துடன் அதிமுகவை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார். அப்போது அதிமுக தலைமை அலுவலகப் பிரச்சனை வந்தது இல்லை. எம்ஜிஆர், ஆர்.எம்.வீரப்பன் உட்பட பல மூத்த அமைச்சர்களை ஒட்டுமொத்தமாக அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்தபோது கூட அதிமுகவில் பிரளயம் ஏற்பட்டது இல்லை. எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தவரை அவர் சிங்கம்போல் கட்சியை வழி நடத்தி சென்றார்.

இந்த சூழ்நிலையில் கடந்த 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர் திடீரென மறைந்தார். அவர் மறைந்த நாளில் இருந்தே அக்கட்சிக்கும் மோதல்களுக்கும் பஞ்சமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சென்னை ராஜாஜி அரங்கத்தில் எம்ஜிஆர் உடல் அருகே ஜெயலலிதாவை நிற்கவிடக் கூடாது என்பதில் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மையாரின் ஆதரவாளர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தடுத்தும் பார்த்தனர். ஆனால் ஜெயலலிதா இரும்புப் பிடியாக அங்கேயே நின்றிருந்தார். அதன் பின்னர் எம்ஜிஆரின் உடலை ராணுவ வண்டியில் ஏற்றும் போது ஜெயலலிதாவும் அதில் ஏற முயன்றார்.

ஆனால் அந்த ராணுவ வண்டியில் இருந்து அப்படியே கீழே தள்ளிவிடப்பட்டார் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதாவின் ஆதரவாளர்களை இது பெரும் கோபத்துக்குள்ளாக்கியது. இந்த சம்பவம்தான் அதிமுகவை இரண்டாக பிளவுபடுத்தியது. ஜானகி, ஜெ. அணிகள் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி இரண்டாகப் பிளவுபட்டது. சட்டசபையில் இரு கோஷ்டிகளும் மோதிக் கொண்ட சம்பவம் தமிழக சட்டசபை வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாக பார்க்கப்பட்டது.

சட்டசபைக்குள் நுழைந்து எம்.எல்.ஏக்களை போலீஸ் தடியடி நடத்தி விரட்டியது. இதன் பின் கடந்த 1988ஆம் ஆண்டு அதிமுக கொடி, சின்னம், தலைமை அலுவலகம் என அத்தனைக்கும் மோதல் ஏற்பட அத்தனையுமே முடங்கிப் போனது. அதன்பிறகு அதிமுக தலைமையகம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமியிடம் அப்போது என்ன நடந்தது என கேட்டபோது, அப்போது மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ஒரு அணியாகவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு அணியாகவும் செயல்பட்டனர். இதில் உண்மையான அதிமுக யார் என்ற பிரச்சனை எழுந்தது. அதிமுகவின் தலைமையகம் ஜானகி அணி வசம் இருந்தது. அப்போது ஜெயலலிதா அணியில் இருந்த திருநாவுக்கரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற முயன்றனர். சிறிது நேரத்தில் ஜெயலலிதா சம்பவயிடத்திற்கு வந்தார்.

சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். உடனே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக கூறி இதேபோல் 144 தடை உத்தரவு போடப்பட்டது. கட்சி தலைமையகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது என்றார்.

மேலும், கட்சி இரண்டாக உடைந்ததால் 1989-ம் ஆண்டு தேர்தலில் ஜானகி அணிக்கு இரட்டைப் புறா, ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னம் ஒதுக்கப்பட்டது. தேர்தலுக்குப் பின்னர் ஜானகி அணி தோற்றதால் ஜெயலலிதா அணியே உண்மையான அதிமுக என்றானது. ஜானகி அம்மாள் அரசியலுக்கு முழுக்குப் போட அதிமுக சின்னம், தலைமை அலுவலகம், கட்சி அத்தனையும் ஜெயலலிதாவின் வசமானது. அதேசூழல் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ளது என்கிறார் கேசி பழனிசாமி.

இராமானுஜம்.கி

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.