திருச்செங்கோட்டில் பாஜக சார்பில் ’தமிழன் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் , அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,
”தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜக சார்பாக மாவட்டம் தோறும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள குறைகளையும் பிரச்சனைகளையும் மக்களிடம் கேட்டு அறிந்து அதை ஒரு திட்டமாக எடுத்துக் கொண்டு இருக்கிறோம். 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள்.
கொங்கு ஈஸ்வரன் இந்த திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த தொகுதிக்காக இதுவரை என்ன செய்துள்ளார்..? நாமக்கல் கவிஞர், திருச்செங்கோடு டி எம் காளியண்ணன் போன்றவர்கள் பிறந்த இந்த நாமக்கல் மண் 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் அலங்கோலமாக உள்ளது.
திமுக ஆட்சியில் 42 லாக்கப் டெத் நடைபெற்றுள்ளது. திமுகவினரே கிட்னி திருட்டில் ஈடுபடுகின்றனர். கள்ளச்சாராயம் உயிரிழப்பில் ஒரு நடவடிக்கை கிடையாது. கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்தில் இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. செந்தில் பாலாஜி காப்பாற்றுவதற்கு முதலமைச்சர் முயற்சி செய்கிறார்” என்று தெரிவித்தார்.







