2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி….!

2026 தமிழ் நாடு சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டிற்கு ஒரு பயணமாக வந்துள்ள பாஜகவின் தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.

பேச்சுவார்த்தை முடிவுற்றதை தொடர்ந்து இருவரும் கூட்டாக  செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ” 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து எப்படி தேர்தலை சந்திப்பது என்ற கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். தமிழக முழுவதும் மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். 2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.