பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாமக, தேமுதிக, டிடிவி தினகரன, பன்னீர் செல்வம் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்க உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையும் முடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் பொறுப்பாளர் கோயலுடன் தமிழ் நாட்டில் கள நிலவரம் குறித்து பேசினோம். எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை. ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி தினகரன் குறித்தும் பேசவில்லை. தேர்தலை பொருத்தவரை திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தான் நோக்கம். அதனால்தான் ஒத்த கருத்து கொண்டவர்கள் வர வேண்டும்” என்றார்.
தொடர்ந்து விஜய் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய் குறித்து இன்று எதுவும் பேசவில்லை எனவும் விஜய் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது எனவும் தெரிவித்தார்.







