மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழகம் மட்டுமல்லாது தேசிய தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் 82 வயது நிறைவடைந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில், எதிர்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார் , தனது 82-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். பங்காரு அடிகளார் அவர்களை இழந்து அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், லட்சக்கணக்கான வாடும் பக்தர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், பங்காரு அடிகளார் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/JPNadda/status/1715004022854402165?t=NID31IirYVoC40hJYrpp5A&s=08
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 1985 ஆம் ஆண்டு மரத்தடி ஒன்றின் கீழ், ஓலை குடிசையில் அமர்ந்து, குறி சொல்ல ஆரம்பித்து, படிப்படியாக மக்களிடையே கடவுள் நம்பிக்கை வளர்த்து, ஆன்மீக புரட்சி செய்து, சாதாரண ஏழை, எளிய, பாமர மக்கள் மத்தியில் பெண் தெய்வ வழிபாட்டை வளர்த்தெடுத்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் தனது 82வது வயதில் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இறைவன் திருவடி அடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய ஆதிபராசக்தி அம்மனை வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆன்மிகத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தைச் சேர்ந்தவர்கள், அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள ஆலயத்தின் கருவறையில் பெண்கள் வழிபாடு செய்யும் அமைதிப் புரட்சியை ஆன்மீகத் துறையில் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பள்ளிகள் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் அந்தப் பகுதியில் உள்ள ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்பினை வழங்கி, அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல உதவியது. இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆன்மீகத்தில் பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்தியவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆன்மீகத் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கள் தெரிவித்து அவரது பக்தர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.







