சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று முதல் 12-ம் தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழா இன்று காலை திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
இந்த நடைபயணத்தில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நடைபயணத்தில் திமுக கூட்டணி கட்சிகளும் கலந்துகொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணத்தை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படம் உள்ளதன் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் இந்த நடைபயணத்தை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் மாநில நிர்வாகிகள் மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை. முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.







