எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது!

காரைக்கால் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 29ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகம் வடமேற்கு கடற்பரப்பில் இன்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களது படகை பறிமுதல் செய்து 11 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

விசாரணை முடிந்து மீனவர்கள் 11 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 காரைக்கால் மீனவர்களை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.