திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், முசிறி, மணச்சநல்லூர், மணப்பாறை, துறையூர், லால்குடி ஆகிய தொகுதிகளின் போட்டியிடும், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக அரசு தமிழக மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்றும், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அதிமுகவும், பாஜகவும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார். அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுக ஆட்சியாளர்கள் பாஜகவிடம் அடிமையாக இருப்பதாகவும் சாடினார். திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல எனக் கூறிய ஸ்டாலின், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையைக் கொண்டது திமுக என்றும் தெரிவித்தார்.







