டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளின் போராட்டம் நான்கு மாதத்தை எட்டியுள்ள நிலையில், இன்று அதனை முன்னிட்டு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கு, காசிப்பூர் மற்றும் டிக்கிரி ஆகிய டெல்லி எல்லைகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த நவம்பர் 26ஆம் தேதியிலிருந்து போராடி வருகின்றனர்.

மத்திய அரசுக்கும் விவசாயி சங்கங்களுக்கும் இடையே நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்படிக்கை ஏற்படதாததால், விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்களாக நடைபெற்று வருவதை முன்னிட்டு, இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த முழு அடைப்பு போராட்டம் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.
குறிப்பாக வட இந்தியாவில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டத்தால் அம்மாநிலங்களில் உள்ள நெடுஞ்சாலைகள் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் பல பகுதிகளில் ரயில் மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி உட்பட நாடு முழுவதும் 32 பகுதிகளில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. டெல்லியில் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் நிறுத்திவைக்கப்பட்டதாக விவசாயி சங்கங்களின் ஒன்றான சம்யுக்தா கிசான் மோர்ச்சா சங்கம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக காசிப்பூர் எல்லையில் அமைந்துள்ள நெடுஞ்சாலை NH9 போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம், விஜயவாடா பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் மூடப்பட்டுள்ளது. விவசாயிகளின் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல பகுதிகளில் விவசாயிகளுடன் கலந்து கொண்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கும் மற்றும் புதுச்சேரியில் இன்று இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறாது எனவும் விவசாயி சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







