வைக்கம் போராட்டம் இந்தியாவிற்கே வழி காட்டிய போராட்டமாக அமைந்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந்தேதி தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் சமூக நீதியை வலியுறுத்தியும் வைக்கம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழா இன்று கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் கேரள அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். முன்னதாக வள்ளிக்காவலாவில் உள்ள சத்தியாகிரகத் தலைவர்கள் நினைவிடத்தில் மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார். விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனும் மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
“ வைக்கம் போராட்டம் சமூக நீதி போராட்டத்துக்கு முன்னோடி போராட்டம்; இந்தியாவுக்கே வழிகாட்டியது போராட்டம் இது. பெரியாரின் எழுச்சியால் தமிழகத்தில் இருந்து பல தலைவர்கள் வைக்கம் வந்து போராடினர். ‘கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் நானும் உடலால் வேறுபட்டாலும் கொள்கையால் ஒன்றுபட்டவர்கள்.
வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டமாக திகழ்வதால் வைக்கம் மண்ணில் நிற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். வைக்கம் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட மகாத்மா காந்தி, தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தார்; தமிழ்நாட்டில் கோயில் நுழைவு போராட்டங்கள் நடத்த தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம்.
வைக்கம் போராட்டம், கேரளா, தமிழ்நாடு சமூக நீதி வரலாற்றில் மட்டுமின்றி இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது. அம்பேத்கர் உள்ளிட்ட பல தலைவர்கள் போராட்டங்களை நடத்துவதற்கும் வைக்கம் போராட்டமே தொடக்கமாக இருந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.







