“ஆனந்தா நான் என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்… அதில் ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்க வேண்டும்”… இந்த வசனத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடமுடியாது… சிவாஜி நடித்து பெரும் வெற்றி பெற்ற பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த வசனத்துக்கு சொந்தக்காரர் திருவாரூர் தாஸ் என்கிற ஆரூர்தாஸ்.

பாசமலர் திரைப்படத்திற்கு வசனம் எழுதிட ஆரூர்தாசை சிபாரிசு செய்தவர்கள் நட்சத்திர தம்பதியான ஜெமினிகணேசன் – சாவித்திரி தான். படப்பிடிப்பில் இருந்த சிவாஜியிடம் ஆரூர்தாசை, ஜெமினி கணேசன் அறிமுகப்படுத்தினார்.
“அப்பா ஆரூரான்! இது ரொம்ப பெரிய படம். பீம்சிங் டைரக்ட் பண்றாரு. கண்ணதாசன் பாட்டு. விஸ்வநாதன் ராமமூர்த்தி மியூசிக். எல்லாம் பெரிய செட்டு! நீ சின்னப்பையன், தாங்குவியா?” என சிவாஜி கேட்டார்.
அதற்கு பதிலாக, “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து” என்ற திருக்குறளை சொல்லி, “ஒடுங்கிப்போய் இருக்கிற காலத்துல கொக்கு மாதிரி காத்திருக்கணும். நல்ல காலம் வரும்போது கொக்கு மீனைக் குத்துறது மாதிரி விரைந்து செயல்படணும்” என ஆரூர்தாஸ் சொன்னார். ஆனால், சிவாஜி படத்தில் வாய்ப்பு கிடைக்காது என புறப்பட இருந்த ஆரூர்தாசை தடுத்த நடிகர் திலகம், “அன்றைக்கு பராசக்தி படத்தில் என்னைத் தூக்கிட்டு, கே.ஆர்.ராமசாமியை வச்சு நான் நடிச்ச சீன்களை எல்லாம் மறுபடியும் ஷூட் பண்ண முயற்சி நடக்கிறதாக கேள்விப்பட்டேன். என்ன ஆனாலும் சரி. ஒரு அடி அடிச்சிக் காட்டணும்னு என் மனதுக்குள்ளே முடிவு பண்ணிட்டேன். அன்னிக்கு எனக்கு ஒரு வெறி வந்திடுச்சு. அந்த வெறியை இப்போது உன்கிட்டே பார்க்கிறேன். நீ ஒரு ‘பாசமலர்’ இல்லை, பத்து ‘பாசமலருக்கு வசனம் எழுதுவே” எனக்கூறி வாய்ப்பளித்தார் சிவாஜி.
அப்துல் கலாம் குறிப்பிட்டதைப்போல கனவு கண்ட ஆரூர்தாஸ், அதை நிறைவேற்ற சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கவில்லை.. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியதால், அன்றைய உச்ச நட்சத்திரங்களான எம்ஜிஆர், சிவாஜியின் திரைப்படங்களுக்கு வசனமெழுதி பரபரப்பானார்…







