தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் – பயண திட்டங்கள் என்னென்ன..?

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 நாட்கள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகள் செல்லவுள்ள நிலையில், அவரின் பயணத்திட்டம் குறித்து காணலாம். 2024ம் வருடம்  ஜன 10, 11-ம் தேதிகளில் சென்னையில்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்…

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 நாட்கள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகள் செல்லவுள்ள நிலையில், அவரின் பயணத்திட்டம் குறித்து காணலாம்.

2024ம் வருடம்  ஜன 10, 11-ம் தேதிகளில் சென்னையில்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மாநாடு நடைபெறவுள்ள நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு வருகிற  மே 23 ஆம் தேதி முதல் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார்.

வருகிற மே 24 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிங்கப்பூர் – இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 350 வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த பயணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, சிங்கப்பூரின் வர்த்தக உறவுகளுக்கான அமைச்சர் எஸ். ஈஸ்வரன்,  SICCI நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

இந்த முதலீட்டாளர் மாநாட்டில் தமிழ்நாடு அரசு – சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழல் குறித்த களத் தகவல்களைப் பெற ஆர்வமுள்ள சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு அங்கு நடைபெறும் மாநாடு துணைபுரியும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மே 26 ஆம் தேதி ஜப்பான் செல்லும் முதலமைச்சர்  31 ஆம் தேதி வரை அங்கு தங்குகிறார். ஒசாகா, டோக்கியோ நகரங்களில் ஜப்பானிய முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்கவுள்ளார் .

ஜப்பான் பயணத்தில்  வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் சார்பாக நடைபெறும் நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின்போது அரசு அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டங்களையும் மு.க.ஸ்டாலின் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.