சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குபட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவனுக்கு மரபணு மாற்றத்தினால் பார்வை பாதிக்கப்பட்டு,கை,கால்கள் முற்றிலுமாக செயலிழந்தன. இதனையடுத்து சிறுவனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் மனோகரன் -பூங்கோதை.இவர்களுக்கு தனுஷ்,வஷ்ரியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.மூத்த மகன் தனுஷ் அப்பகுதியிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் தனுஷ் மரபணு மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவன் தனுஷ் சில நாட்களுக்கு முன்னர் புத்தக்கப்பை மீது ஓடுவது,சக மாணவர்கள் மீது மீதப்பது, சுவற்றில் முட்டி நிற்பது என சிறுவனின் செயல்பாடுகளில் கொஞ்ச,கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதலில் சிறுவன் வேண்டுமென்றே செய்வதாக ஆசிரியர்கள் கோபப்பட்டனர். நாளடைவில் தடுக்கி விழுவது, மரத்தில் மோதுவதுமாக இருந்ததால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் மருத்துவ பரிசோதனை செய்யுமாறு அவரது பெற்றோர்களிடம் கூறியதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ததில் தனுஷ்க்கு மரபணு மாற்றத்தால் அரிய நோயான அட்ரினோ லூகோ என்ற நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது.
இந்நோயின் தாக்கத்தால் பார்வை இழப்பு ஏற்படுவதுடன்,கை,கால்கள் உள்ளிட்டவை செயலிழக்கும் அபாயம் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இதனையடுத்து தனுஷின் பெற்றோர் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க உதவ வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதனை தொடர்ந்து சிறுவனுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் சிறுவன் தனுஷ் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-வேந்தன்







