சனாதானம், வர்ணாசிரமம்தான் காலாவதியானது திராவிடம் அல்ல என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மூன்றாம் ஆண்டில் பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில் “திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது..
” முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றேன். திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் 1222 இடங்களில் மூன்று நாட்கள் நடந்த திட்டமிட்டு உள்ளோம்.
இதுவரை மூன்றே நாளில் இவ்வளவு கூட்டங்கள் நடத்தியதில்லை. இது ஒரு சாதனை தான். பேரறிஞர் அண்ணா பிறந்த மாவட்டத்தில் நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மிக்க மகிழ்ச்சி. வீழ்ந்து கிடந்த சமுதாயத்தை காக்க வந்தவர் பேரறிஞர் அண்ணா பிறந்த மாவட்டம் இது. அதில் குறிப்பிடும் படியாக இந்த பல்லாவரம் முன்பு பல்லவபுரம் என்று இருந்தது.
திராவிடம் காலாவதியானது என்று ஆளுநர் சொல்லுகிறார். அவருக்கு சொல்கிறேன். சனாதானம் வர்ணாசிரமம், தான் காலாவதியானது. ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்குதான் உண்டு. அதனால் தான் ஆளுநர் பயப்படுகிறார். திராவிடம் எதையும் பிரிக்காது, யாரையும் தாழ்த்தாது. அனைவரையும் சமமாக நடத்தும். தற்போது திராவிடம் ஏறு முகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் ரவியாக செயல்படுவதை திராவிட மண் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. திராவிடம் என்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சொல் அல்ல. பாஜக ஆளும் மாநிலம் மணிப்பூர் வன்முறையால் பற்றி எரிகிறது. சமீபத்தில் பாஜக ஆளும் கர்நாடகத்தில் கலவரம் வெடித்தது. அதுபோல தமிழ்நாடு மாற வேண்டும் என ஆளுநர் நினைக்கிறாரா..?
திமுக ஆட்சி சீரோடும், சிறப்போடும் நடைபெற்று வருகிறது. திமுக அரசின் செயல்பாடுகளால் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,37,616 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. 217 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளது. 3,75,311 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களில் 16வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு வந்துள்ளோம்.
அரசின் நிர்வாகத்தின் அங்கமாக இருக்க கூடிய ஆளுநர் எதற்கு எதிரி கட்சி தலைவரை போல் செயல்படுகிறார்.எந்த நோக்கத்திற்காக அவர் அனுப்பப்பட்டார். மாநிலத்தில் நிலவும் அமைதியை குலைக்க வந்துள்ளாரா, தமிழ் நாட்டின் சமூக சூழலை ஏதாவது பேசி குழப்ப வந்துள்ளாரா என்பதுதான் மக்கள் சந்தேகமாக உள்ளது.
சிதம்பரத்தில் குழந்தை திருமண விவகாரத்தில் திருமணம் நடந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
குழந்தை திருமணத்தை தடுக்கும் அரசின் நடவடிக்கையில் சட்டம் அனைவருக்கும் சமமாகத்தான் செயல்படுகிறது. குழந்தை திருமண விவகாரத்தில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஆளுநர் சொல்கிறாரா..?
சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரத்தில் ஆளுநருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்கெனவே பதில் அனுப்பியுள்ளோம். 13 வயது சிறுமிக்கும், 15 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்துவைத்தால் சட்டப்படி தவறுதான். இதன் மூலம் பெண்களுக்கு 7, 8 வயதில் திருமணம் செய்த சனாதன காலத்தை உருவாக்க ஆளுநர் ஆர்.என்.ரவி நினைக்கிறாரா ..? “ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







