அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை வரும் 12ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் 5-வது நாளாக விசாரணை நடைபெற்றது. அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டார். 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், திருத்தப்பட்ட கட்சி விதிளை தேர்தல் ஆணையம் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கட்சியில் 4 ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்தது என வாதிட்ட அதிமுக வழக்கறிஞர், மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வந்தது கட்சியின் அடிப்படை கட்டுமானத்தை சிதைப்பதாக ஓ.பி.எஸ் கூறுவது தவறு என்று கூறினார். திமுக தலைவர்களை சந்தித்ததாக கூறப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்த பிறகு தான், பன்னீர்செல்வத்தை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் வாதிடப்பட்டது. அதிமுக தரப்பு வாதங்கள் முடிவடையாததால் வரும் 12ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








