வடசென்னை படத்தின் அடுத்த பாகமான ராஜன் வகையறா திரைப்படம் தயார் நிலையில் உள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான படம் வடசென்னை. தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாப்பாத்திரம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. மேலும் ராஜன் கதாப்பாத்திரத்தை தனி படமாக வெளியிட வேண்டும் என்றும் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அதேபோல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்றும் பலரின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் ‘வடசென்னை’ படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ”வடசென்னை படத்தில் அமீரின் ’ராஜன்’ கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ‘ராஜன் வகையறா’ என்ற படத்தை வெற்றிமாறன் தயாராக வைத்துள்ளார். 2 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கும் இந்த படத்தை வெற்றிமாறன் விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டும். இந்த படம் ரிலீஸ் ஆனால் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்.”







