”திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்ததே… அதுதான் திராவிடம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திராவிடம் என்றால் என்ன என்று சிலரை கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று  நடைபெற்ற வழக்கறிஞர் ஏ.என். புருஷோத்தமனின் இல்லத் திருமண…

திராவிடம் என்றால் என்ன என்று சிலரை கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று  நடைபெற்ற வழக்கறிஞர் ஏ.என். புருஷோத்தமனின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது..

” இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

இன்று நடைபெற்றிருக்கக்கூடிய இந்த திருமணம், சீர்திருத்தத் திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணமாக நடந்தேறியிருக்கிறது. இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெறுகிற நேரத்தில், அதிலும் குறிப்பாக நாம் வாழ்த்துகிற நேரத்தில் ஒன்றை தவறாமல், மறக்காமல், வழக்கமாக, வாடிக்கையாக வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய ஒரு செய்தியை நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். என்ன அந்த செய்தி என்று கேட்டால்,  இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால்,  அந்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை நாம் பெற்றிருக்கவில்லை.  சட்டம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

அந்த நிலையை மாற்றிட வேண்டும் என்பதற்காகத்தான் பேரறிஞர்  அண்ணா  1967-இல் ஆட்சிப் பொறுப்பேற்று ஆட்சியின் தலைவனாக தமிழக முதல்வராக சட்டமன்றத்திற்கு உள்ளே முதன் முதலாக நுழைந்து,  சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்தார்.  ஆகவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கக் கூடிய இந்தத் திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது. இது சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணம் மட்டுமல்ல, ஒரு தமிழ் திருமணம்.

இன்னும் பெருமையோடு சொல்லவேண்டும் என்று சொன்னால், நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.  எனவே அந்த அங்கீகாரத்தோடு இது ஒரு தமிழ்த் திருமணமாக நடந்தேறியிருக்கிறது. அது எல்லோருக்கும் மகிழ்ச்சி. அப்படிப்பட்ட இந்தத் திருமணத்தில் நாம் எல்லாம் கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு மணமக்களைத் தமிழ் உணர்வோடு வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

முதன்முதலாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி  33 விழுக்காடு ஒதுக்கீட்டை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில் வழங்கவேண்டும் என்று சொன்னபோது எந்த மாநிலமும் நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை,  முதல் மாநிலம் தமிழ்நாடுதான் முன்வந்தது. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, நான் சென்னையின் மேயராக இருந்தபோது. இதுதான் திராவிட மாடல்.

இன்றைக்கு பெரிய பெரிய பதவில் உட்கார்ந்து கொண்டு,  யார் யாரோ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அந்த பதவி என்பதே வேஸ்ட்.  அதுவும் பெரிய பெரிய மாளிகையில் உட்கார்ந்து கொண்டு,  திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? இப்போது நடந்து கொண்டிருக்கிற கல்யாணம் – இதுதான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன? என்று கேட்கிறாரே அவரே தொடர்ந்து இருக்க வேண்டும். அது இன்னும் நம்முடைய பிரச்சாரத்திற்கு வலு சேர்த்துக்கொண்டே இருக்கிறது.

நான் இங்கே இருக்கக்கூடிய  மத்திய அரசில் இருக்கக்கூடிய பிரதமரை, உள்துறை அமைச்சராக இருக்கின்ற அமித்ஷாவை கேட்டுக்கொள்ள விரும்புவது, தயவுசெய்து இங்கே இருக்கக்கூடிய ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றவேண்டாம். இந்த நாடாளுமன்றத் தேர்தல் வரைக்குமாவது இருக்கவேண்டும். அதில் எங்களுக்கு பல சௌகரியங்கள். எது வேண்டுமென்றாலும் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்றைக்குப் பொதுமக்கள் யாரும் இதை பொருட்படுத்தவில்லை. இன்றைக்கு சமூக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கக்கூடிய செய்திகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, இந்தச் சூழ்நிலையில்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பொறுப்பேற்று தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறதோ, அந்த உறுதிமொழிகளை எல்லாம் சிறப்பாகத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்த காட்சிகளை எல்லாம் பார்க்கிறீர்கள்.

இன்றைக்குக் கருத்துக்கணிப்பு வரக்கூடிய சூழ்நிலை எல்லாம் பார்க்கிறபோது, எப்படி தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியைக் கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றோமோ, அதேபோல் வடமாநிலத்தில் நடைபெற இருக்கக்கூடிய 5 மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக, உறுதியாக இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. மோடி தலைமையில் ஆண்டு கொண்டிருக்கக்கூடிய மத்திய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

2024-ல் நடைபெறவிருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு நீங்கள் எல்லாம் தயாராக இருக்கவேண்டும், தயாராக இருக்கவேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு, மணமக்களை பொறுத்தவரைக்கும் எப்போதும் கோரிக்கைகள் வைக்கமாட்டேன். அதிலும் நம்முடைய மணமகள் டாக்டர், மணமகன்  ராதாகிருஷ்ணன், இன்ஜினியர், BE படித்திருக்கிறார். நாட்டில் இருக்கக்கூடிய நிலவரங்கள் அத்தனையும் அவர்களுக்கு நன்றாக புரியும்.

அதனால் அவர்களுக்கு அறிவுரைகள், ஆலோசனைகள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  இருந்தாலும், ஒரே ஒரு வேண்டுகோள், தமிழ்நாட்டில் இருக்கிறோம், தமிழர்களாக வாழ்கிறோம், தமிழுக்காகவே போராடுகிறோம், தமிழுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, உங்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள், சூட்டுங்கள் என்று அன்போடு கேட்டு, அன்போடு மட்டுமல்ல, உரிமையோடு கேட்டு விடைபெறுகிறேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உரையாற்றினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.