மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.
இதனிடையே இப்பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்வது என முடிவானது. அதன் படி தற்போது அணு ஆயுதம் தயாரிப்பதை கைவிடுவது தொடர்பான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா – ஈரான் இடையே ஜெனிவாவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஓமன் மத்தியஸ்தம் செய்து நடத்தும் இந்தப் பேச்சுவார்த்தைகளில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்குடன் இணைந்து, அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு எடுக்கப்படாத நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு தொடங்கியுள்ளது. அணுசக்தி விவகாரத்தில் இரண்டு வாரங்களுக்குள் ஒரு உடன்பாடு எட்டப்படவில்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் ஈரானுக்கு அழுத்தம் தரும் வகையில் கடந்த 24 மணிநேரத்தில் எப்22, எப்35, எப்16 உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்களை, மத்திய கிழக்கு பகுதிகளில் அமெரிக்கா குவித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அங்கு போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஈரான் – அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதலில் ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்ற நடவடிக்கை மூலம் நடான்ஸ், ஃபோர்டோவ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்க இராணுவம் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.







