போச்சம்பள்ளியில் இயங்கி வந்த நிதி நிறுவனம் இரவோடு இரவாக காலி செய்ய முயன்றதால் டெம்போ உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் தங்கராஜ் என்பவரது மகன் ராபர்ட் மற்றும் அவரது மனைவி வனிதா ஆகியோர் ஏபிஆர் பைனான்ஸ் மற்றும் நிறுவனங்கள் சிலவற்றை நடத்தி வந்தனர்.
தீபாவளியை முன்னிட்டு பரிசுப் பொருட்கள் வழங்குவதாக அறிவித்த நிலையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 150 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையிலான பரிசுத் திட்டங்களுக்கு தவணைகளை செலுத்தி வந்தனர்.
தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பரிசு தொகைகள், தங்க நாணயம், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படும் என்று கூறிய நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக பொருட்களை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஏபிஆர் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் வேன், கண்டெய்னர் லாரி, டெம்போ உள்ளிட்டவைகள் மூலமாக இரவோடு இரவாக எடுத்துச் செல்வதாக தகவல் பரவியது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஏபிஆர் சூப்பர் மார்க்கெட் முன்பு குவிந்து மேனேஜர் மற்றும் ஊழியர்களை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் கிரிஜா ராணி மற்றும் போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, உரிமையாளரை போன் செய்து விசாரணைக்கு அழைத்தனர்.
நிதி நிறுவன உரிமையாளர் ராபர்ட் பருப்பு வாங்க திருப்பதிக்கு சென்றுள்ளதாகவும் நாளை காலை வந்து நேரில் விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதம் நடத்தியதால் அங்கிருந்த டெம்போக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, மேனேஜர் மற்றும் ஊழியர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







