காயமடைந்த தந்தையை மருத்துவமனைக்கு தள்ளுவண்டியில் 50 கி.மீ. அழைத்துச்சென்ற சிறுமி!

ஒடிசாவில் காயமடைந்த தந்தையை, அவரது மகள் 50 கி.மீ தூரம் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  ஒடிசா மாவட்டம் நாடிகன் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சுஜாதா சேத்தி (14). இவரது தந்தை சம்புநாத் கடந்த…

ஒடிசாவில் காயமடைந்த தந்தையை, அவரது மகள் 50 கி.மீ தூரம் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 

ஒடிசா மாவட்டம் நாடிகன் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சுஜாதா சேத்தி (14). இவரது தந்தை சம்புநாத் கடந்த அக்.22-ம் தேதியன்று நடந்த குழு மோதல் ஒன்றில் காயமடைந்தார். காயமடைந்த தந்தையைத் தள்ளுவண்டியில் வைத்து, தனது கிராமத்திலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள தாம் நகர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பத்ரக் மாவட்ட தலைமை மருத்துவமனைக்குக் தந்தையை கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி, மறுநாள் தனது தந்தையை மேலும் 35 கி.மீ. தூரம் அதே தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார் சுஜாதா. பத்ரக் மருத்துவமனையின் மருத்துவர்கள் சம்புநாத்துக்கு முதற்கட்ட சிகிச்சையளித்து, அறுவை சிகிச்சை செய்ய, ஒருவாரம் கழித்து மீண்டும் அழைத்துவருமாறு அறிவுறுத்தினர்.

தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுக்க சிறுமியிடம் பணம் இல்லாததால் தள்ளுவண்டியில் தந்தையை மீண்டும் வீட்டிற்கு அழைத்துவர முடிவு செய்தார். சுமார் 2 கி.மீட்டர் தள்ளுவண்டியில் தந்தையை அழைத்துவந்த சிறுமியை, பத்திரிகையாளர்கள் சிலர் கண்டு விசாரித்தனர். அவர்களிட,ம் நடந்தவற்றைக் கூறிய சிறுமி சுஜாதா, தந்தையை அழைத்துச்செல்ல தன்னிடம் பணம் இல்லை என்றும், ஆம்புலன்ஸ் சேவைக்கு மருத்துவமனையில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்றும் கூறினார்.

அதன்பின்னர் பத்திரிகையாளர் முயற்சியில், பத்ரக் எம்எல்ஏ சஞ்சிப் மல்லிக், தாம்நகர் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திர தாஸ் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். அவர்களின் தலையீட்டின் பேரில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. சம்புநாதனின் அறுவை சிகிச்சை முடிந்து அவர் குணமடையும் வரை மருத்துவமனையில் இருக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டனர். தந்தையின் மருத்துவத்திற்காக மகள் செய்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.