தமிழ்நாட்டில் சேவை செய்ய பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்னை இல்லாமல் செய்திடுவோம் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட என் மண் என் மக்கள் யாத்திரை துவக்க விழா அவிநாசியில் இன்று நடைபெற்றது. அவிநாசி சேவூர் சாலையில் தொடங்கிய யாத்திரையை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கொட்டும் மழையிலும் பயணம் தொடர்ந்து நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதாவது:
திருவள்ளுவர் வாழ்ந்த பூமியில் நிற்கிறேன். திருவள்ளுவர் போதித்த அனைத்து சிந்தனைகளும் அனைவரையும் சென்றடைய வேண்டும். பிரதமர் மோடி தமிழின் பெருமையை உலக நாடுகளுக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் இளம்தளபதி அண்ணாமலை, நாட்டின் உயர்வுக்கு உழைக்கிறார். ஊழலை ஒழிக்க பிரதமர் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறார்.
நாட்டிலேயே ஊழல் அதிகம் செய்யும் கட்சி திமுக. மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் ஊழல் இரு மடங்கானது . மகன், மருமகன் இருவரும் வருமானத்தை அதிகரித்து கொண்டிருக்கின்றனர். பிரதமர் 100 படுக்கை கொண்ட ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை அவினாசிக்கு கொடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு சேவை செய்ய வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்னை இல்லாமல் செய்திடுவோம். விவசாயிகளை பற்றியோ பொதுமக்களை பற்றியோ திமுக கவலைப்படுவதில்லை. ஒப்பந்ததாரர்களிடம் பணம் பறிப்பதிலேயே குறியாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் முன்னேற்ற பாதைக்கு கொண்டு போக பிரதமருக்கு பின் அண்ணாமலை அதிகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் அனைத்து தரப்பினரும் செங்கோலுக்கு மரியாதை செலுத்தி வருகிறனர். நேரு காலத்தில் காங்கிரஸ் கட்சியினர் அதனை கைத்தடியாக பயன்படுத்தினர். காங்கிரஸ் வீழ வேண்டும்.
பிரதமர் உங்களில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். குடும்ப வழிமுறையில் அல்லாமல் சாதாரணம் விவசாயி மகனை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். 2 வருடத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும் என்பது மோடியின் உறுதிமொழி. அடுத்த தேர்தலில் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் பாடம் புகுட்டுவீர்.
வளர்ச்சி வேண்டும் என்றால் தாமரைக்கு வாக்களியுங்கள், ஊழலும் குடும்ப வளர்ச்சியுமென்றால் உதயசூரியனை தேர்ந்தெடுங்கள். அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக தமிழ்நாட்டிற்கான வளர்ச்சியை கொடுக்கும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசினார்.







