“அரசியலமைப்பு பதவியை வகிக்கத் ஆளுநர் தகுதியற்றவர் ” என குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக அமைந்துள்ளது எனவும் அரசியலமைப்புச் சட்ட மீறல்கள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது..
மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இருப்பினும், பெயரளவில் மாநிலத்தின் தலைவரான ஆளுநர், தனது அதிகாரத்தை மாநில முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படியே பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் என்பவர், முக்கியமான அரசியலமைப்பு கடமைகளைச் செய்பவராகவும், பாரபட்சமற்றவராகவும், அப்பழுக்கற்ற நேர்மையான நபராகவும் இருக்க வேண்டும். மக்களாட்சி தத்துவம் என்பது நமது அரசியல் சாசனத்தின் உயிர்நாடி ,அந்த மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை நிறுவுவதற்காகவே, நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் காலனிய சக்திகளை எதிர்த்துப் போராடி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.
அரசியல் சாசனத்தின் மீதும், அது பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் மீதும் ஆளுநருக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அரசியலமைப்பின் இலட்சியங்கள் முகவுரையில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு , இந்த அடிப்படைக் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை இல்லாத ஆளுநர், அரசியலமைப்பு பதவியை வகிக்கத் தகுதியற்றவர்.
அரசியல்வாதியாக மாறும் ஒரு ஆளுநர், அப்பதவியில் தொடரவே கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை, செயல்பாடுகள், முடிவுகளுக்கு சவால் விடும் வகையில் ஆளுநர் அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின் நோக்கமல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைக்கு ஆளுநர் வெளிப்படையாக முரண்படுவது அல்லது சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்து முட்டுக்கட்டை போடுவது அல்லது கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை போன்ற அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களுக்கு எதிராகச் செயல்படுவது போன்றதொரு சூழ்நிலையை அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.
2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டை சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தங்களது உறுதியான ஆதரவை வழங்கி தேர்ந்தெடுத்துள்ளதை இந்தியக் குடியரசுத் தலைவர் நன்கு அறிவார் என்றும், திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவியேற்ற நாள் முதல் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறது.
ஆனால், தமிழ்நாடு ஆளுந ஆர்.என்.ரவி வெளிப்படையாகத் தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு, தமிழ்நாடு அரசும், சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும், சட்ட முன்வடிவுகள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையில்லாமல் காலதாமதம் செய்து வருகிறார்.
இதற்கு முன்பு நாகாலாந்து கவர்னராக ஆர்.என். ரவி பொறுப்பு வகித்தபோதும் அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. உண்மையில் நாகாலாந்து ஆளுநர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட பிறகுதான் நாகாலாந்திற்கு ஒரு நிம்மதி ஏற்பட்டுள்ளதாக, நாகாலாந்து தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்.டி.பி.பி) தலைவர் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தைக் கலந்தாலோசிக்காமல், அதற்கு இணையாக, மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவுகளை ஆர்.என். ரவி வழங்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் விவகாரங்களில் தலையிட்டதாக என்.டி.பி.பி தலைவர் சிங்வாங் கொன்யாக் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இத்தகைய செயலுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பரவலான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான், ஆர்.என்.ரவி 2021-செப்டம்பரில் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றது முதல், சட்டபூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக அரசுடன் கருத்தியல் மற்றும் அரசியல் போரில் ஈடுபட்டு வருகிறார்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பல்வேறு நடவடிக்கைகள், அவர் ஆளுநர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்பதைப் புலப்படுத்துவதாக பின்வரும் நிகழ்வுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
– சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற காலதாமதம்
– குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம்
– தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அரசியல் மற்றும் கருத்தியல் எதிராளியாக செயல்படுதல்
– குற்றவாளிகளை ஆதரித்தல் மற்றும் காவல்துறை விசாரணையில் தலையிடுதல்
– ஒரு கடுமையான அரசியலமைப்பு மீறல்
– ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியது
ஆளுநர் என்பவர் அரசியல் விருப்பு வெறுப்புகள், கட்சி அரசியல் அல்லது எதிர்கால நியமனங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அற்றவராக இருக்க வேண்டும் என்ற தனது கருத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்வார் என தான் நம்புவதாகவும், ஆளுநர் அலுவலகம் என்பது அரசியல் சார்பற்றதாகவும், ஆளுநர் தனது செயல்பாட்டிலும், பார்வையிலும், உண்மையாகவும் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு நல்ல ஆளுநர் தன்னைப் பற்றிய ஒரு உயர்வான கருத்தை அரசாங்கத்திற்குள்ளும், மாநில மக்கள் மத்தியிலும் உருவாக்க உதவ வேண்டும் என்றும், அவர் மாநில மக்கள் மீதும், திறமையான நிர்வாகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதோ ஒரு கட்சி அல்லது கருத்தியலின் நலனை வளர்ப்பதற்காக ஆளுநர் செயல்படக் கூடாது. ஆளும் கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சியின் கைகளில் மாநில ஆட்சி இருக்கும்போது, மாநிலத் தலைநகர்களில் அமர்ந்துகொண்டு, அந்த மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பைத் தேடும் ஆளுநரை வெறும் ஒன்றியத்தின் முகவராகத்தான் கருதமுடியும் என்றும், ஆளுநரின் இத்தகைய செயல் நமது கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து, இழிவுபடுத்தி, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களையே அழித்துவிடும் என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டு மக்களின் சேவைக்கும், நல்வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்கும், 159-ஆவது பிரிவின்கீழ் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் ஆர்.என். ரவி மீறியுள்ளார் என்பது தெளிவாகிறது என்றும், அவர் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர சி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்தும், அதற்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள், மறுபுறம் தனது அமைச்சர் ஒருவர் மீது வழக்கு விசாரணை தற்போதுதான் தொடங்கியுள்ள நிலையில், அவரை “டிஸ்மிஸ்” செய்ய அவசர கதியில் செயல்படுவதன் மூலம் தனது அரசியல் சார்புகளை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், ஆர்.என். ரவி தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள் மூலம், தான் ஒருதலைப்பட்சமானவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார் என்றும், அவர் உயர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 156(1)-இல், குடியரசுத் தலைவர் விரும்பும் காலம் வரை ஆளுநர் பதவியில் இருப்பார் என்று இருப்பதாகவும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியும், தமிழ்நாடு அரசின் நலன் கருதியும் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து உண்மைகளையும் இந்தியக் குடியரசுத் தலைவரின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நமது இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்களின் உணர்வையும், மாண்புகளையும் பாதுகாக்கும் வகையில், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்புப் பதவியில் ஆர்.என். ரவிநீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை இந்தியக் குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுவதாகவும் தனது 19 பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.







